மக்கள் மனதில் இடம் பிடித்த ‘கருப்புக் கலைஞர்’

சென்னை- 28.

திரைப்படக் கலைஞர், அரசியல் தலைவர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகத் தன்மைக் கொண்ட கேப்டன் விஜயகாந்த தமிழ்நாட்டு மக்களின் இதயத்தில் சுமார் 40 ஆண்டுகள் கோலோச்சியவர்,
நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி’ என்ற இயற்பெயர் கொண்ட இவர், விஜயகாந்த் என்ற பெயரில் 1979 -ஆம் ஆண்டு ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார், 2015 ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களின் அன்பை கவர்ந்து பிரபலமானவர்.
விஜயகாந்த் இதுவரை தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவரது திரைப்படங்கள் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டிருந்தாலும் இவர் தமிழ் சினிமாவில் தமிழ் படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார்,
இவருக்கு தமிழ் சினிமாவில் “புரட்சி கலைஞர்’ என்னும் பட்டம் உண்டு.
விஜயகாந்த், மதுரையில் கே.என் அழகர்சுவாமி மற்றும் ஆண்டாள் அழகர்சுவாமி தம்பதிக்கு மகனாக 1952- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25- ஆம் தேதியில் பிறந்தார்.
இளமையில் நடிப்புக் கலையில் ஆர்வம் கொண்ட விஜயராஜ் சினிமாவில் நடிகன் ஆக வேண்டும் என்ற மோகத்தில் சென்னைக்கு வந்தவர். இடைவிடாது முயற்சி காரணமாக கடந்த 1979 -ஆம் ஆண்டு ‘அகல் விளக்கு’ என்ற படத்தில் விஜயகாந்த் என்ற பெயரில் அறிமுகமானார்.
தொடக்கத்தில் வில்லன் கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினாலும், பின்னர் நாயகனாக தனது பயணத்தை தொடங்கினார். 1981 ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இவருக்கென ஒரு அடையாளத்தைப் பெற்று தந்தது.
இவர் நடிக்கும் படங்களில் தேசப்பற்று வசனங்கள் மிகவும் அழுத்தமாக இருக்கும். ஊழல், திருட்டு என சட்ட விரோத செயல்களுக்கு இவரின் குரல் திரைப்படங்களில் ஒலிக்கும்.
இவர் காவலர், ராணுவம் போன்ற கதாபாத்திரங்களில் அதிகம் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ‘புரட்சி கலைஞர்’ என்ற பட்டம் பெற்றிருந்தாலும் இவரை தமிழ் திரைப்பட ரசிகர்கள் ‘கேப்டன்’ என்றே அழைக்கின்றனர்.
இவரது 100- வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ படத்திற்கு பின்னர் இவருக்கு இந்த பட்டம் கிடைத்தது.
நடிப்பையும், நாட்டு பற்றையும் பாராட்டி – தமிழக அரசு விஜயகாந்த் அவர்களுக்கு கலைமாமணி விருது (2001), எம் ஜி ஆர் விருது (1994), சிறந்த தமிழ் திரை நட்சத்திரத்திற்கான பிலிம்பேர் விருது (2009) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


நடிகர் விஜயகாந்த் நடிகனாக மட்டுமில்லாமல், தமிழக திரைப்பட சங்கம் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தமிழ் திரைப்பட சங்கத்திற்கு இருந்த பல கோடி ரூ பாய் கடனை தனது நிர்வாகத் திறமையின் மூலம் அடைத்து அந்த அமைப்பை கடனில் இருந்து மீட்ட பெருமையும் விஜயகாந்திற்கு உண்டு. .
கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கினார். அடுத்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார்.
அதன் பின் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. அந்த தேர்தலில் 26 இடங்களை வென்றதன் மூலம் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமை மிகு பதவி விஜயகாந்திற்கு கிடைத்தது,
1990 -ஆம் ஆண்டு ஜனவரி 31- ஆம் தேதி நடிகர் விஜயகாந்த், பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சன்முகப் பாண்டியன் என்னும் இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் ‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நலன் குறைவுற்று இருந்ததால் அவர் வகித்து வந்து தேமுதிக பொதுச் செயலாளர் பதவியை மனைவி பிரேமலதா இரு வாரங்கள் முன் ஏற்றுக்கொண்டார்.
000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *