தங்கமாகிறது தக்காளி.. ஒரு கிலோ விலை ரூ 120 வரை.

தக்காளி விலையைக் கேட்டால் தலை வெடித்துவிடுவதுப் போல இருக்கலாம். உலகம் முழுவதும் மூன்று காய்கறிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். உருளைக் கிழங்கு, தக்காளி, வெங்காயம் இந்த மூன்றுந்தான் அவை.

சென்னையில் கோயம்பேட்டில் உள்ள காய்கறிச் சந்தை இந்தியாவின் பெரிய சந்தைகளில் ஒன்று. ஆனால் சுத்தமாக இருக்காது என்பது தனிக்கதை. இந்த சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடாகம், தெலுங்கானா,மராட்டியம் போன்ற மாநிலங்களி்ல் இருந்து தினமும்  லாரிகளில் காய்கறி வருவதும் தெரிந்ததே, தினமும் சுமார் 700 லாரிகள் மூலம் 7000 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஆனால் செவ்வாய்க் கிழமை அன்று 400 லாரிகளில் 4000 டன் காய்கறிகள் மட்டுமே வந்து சேர்ந்தது.

இதனால் கடந்த சில  நாட்களாக உச்சத்தில் இருந்த தக்காளியை கிலோ 100 ரூபாய் கொடுத்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். அவர்கள் பொதுமக்கள் நேரடியாக வாங்கும் கடைகளில் இந்த தக்காளியை கிலோ 130 ரூபாய் வரை விலை வைத்து விற்கின்றனர்.

தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றம் என்பது வினோதமான ஒன்று.  சேலம், தருமபுரி போன்ற மாவட்டங்களில் ஜனவரி மாதத்தில் அதாவது பனிக்காலத்தில் ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு கூட விற்கப்படும். பறித்து விற்பதற்கு கொண்டு வரும் செலவுக்குக் கூட கட்டுப்படியாகவில்லை என்று கூறி விவசாயிகள் மூட்டை,மூட்டையாக கொட்டி தங்கள் விரக்தியை வெளிப்படுத்துவதும் உண்டு.

அதே ஏப்ரல்,மே, ஜுன் மாதங்களில் வெயில் கடுமையாக இருப்பதால் தக்காளி விளைச்சல் போதுமான அளவு இருப்பதில்லை.விலை தாறுமாறாக உயர்ந்துவிடுகிறது.

தென் மேற்கு பருவமழை ஆங்காங்கு பெய்ய ஆரம்பித்து இருப்பதால் தக்காளி விளைச்சல்  அதிகரித்து விலை குறைய இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *