திருவாரூரில் புகழ்பெற்ற தியாகராஜர் கோயில் ஆழித்தோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சைவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவின் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப் புகழ்பெற்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் ஏப்.1ஆம் தேதி காலை 7:30 மணிக்கு தொடங்கியது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் இணைந்து ஆழித்தேரை வடம் பிடித்து, தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழித்தேர் என்ற பெயருக்கு ஏற்றார்போல், இந்த தேரானது 96 அடி உயரம் மற்றும் 360 டன் எடையுடன் பிரம்மாண்டமாக ஆடி அசைந்து 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்தது. கீழரத வீதியில் துவங்கிய தேரோட்டம் தெற்கு ரதவீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக வலம் வந்து இறுதியாக மாலை 7 மணி அளவில் நிலை சேர்ந்தது. இந்தத் தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தையொட்டி, மாவட்டம் முழுவதுதிலிருந்தும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாதுகாப்பு பணிக்காக 1500 காவலர்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.