மகளுக்கு தவறான சிகிச்சை - தலைமைக்காவலர் புகார்

தலைமைக் காவலர் மகளுக்கு தவறான சிகிச்சை -மருத்துவக்கல்வி இயக்ககத்திற்கு ஒட்டேரி போலீசார் பரிந்துரைக்கடிதம்

ஏப்ரல்.15

சென்னை அரசு மருத்துவமனையில் தலைமைக் காவலரின் 10 வயது மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு ஓட்டேரி போலீசார் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் கோதண்டபாணியின் 10 வயது மகள் பிரதிக்ஷா. இவர் 3 வயது முதல் சிறுநீரக பிரச்சனை (Nephrology) காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைபெற்று மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை கடந்த 5 வருடங்களாக உட்கொண்டு வந்துள்ளார்.

அந்த மாத்திரையின் எதிர்விளைவு காரணமான பிரதிக்‌ஷாவின் வலது கால் பாதத்தில் அரிப்பு ஏற்பட்டதையடுத்து, மீண்டும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுமி பிரதிஷா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு, சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பிரதிஷ்ஷாவுக்கு இரத்த உறைவு ஏற்பட்டதாகவும் அதன் விளைவாக பாதம் கருகியதுடன் உடலில் உள்ள இரத்தம் கெட்டுப்போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தங்கள் அனுமதியின்றி இரத்த சுத்திகரிப்பு (Dialysis) செய்யப்பட்டதன் விளைவால் சிறுமிக்கு வலிப்பு நோயும் ஏற்ப்பட்டுள்ளதாக தலைமைக் காவலர் குற்றம்சாட்டியுள்ளார். இவை அனைத்தும் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சிய போக்கால் நடந்ததது எனவும், மருத்துவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், கோதண்டபாணி தலைமை செயலக வாசலில் பாதிக்கப்பட்ட தனது மகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் தலைமை செயலகம் வெளியே பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், துணை ஆணையர் உத்தரவின் பேரில், தலைமைக் காவலர் கோதண்டபாணி பணிபுரியும் ஓட்டேரி காவல் நிலையத்தில், அவரிடம் இருந்து புகார் பெறப்பட்டுள்ளது. அந்த புகாரில், தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பது கடந்த ஆண்டு மருத்துவமனையால் வழங்கப்பட்ட மருத்துவஅறிக்கையால் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதனால், சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், புகார்மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை சிபிசிஐடி மாற்றிடவும், இரண்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரணை குழு அமைத்திடவும், குழந்தையின் மருத்துவ அறிக்கையை உடனடியாக வெளியிடவும் அந்தப் புகாரில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட ஓட்டேரி போலீசார், மருத்துவ கல்வி இயக்ககத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், புகார் தெரிவிக்கப்பட்டிருப்பது மருத்துவத்துறை மீது என்பதால், துறை ரீதியிலான விசாரணை நடத்தும்படியும், அதன் அறிக்கையை தரும்படியும் ஓட்டேரி போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *