தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை மக்கள் சிரமமின்றி கொண்டாடும் வகையில், 500 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் சித்திரை 1ம் தேதி நாளை (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை தினம் என்பதால், வெளியூர்களில் வேலை நிமித்தமாக வசிப்போர் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள்.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர் வெளியூர்களுக்குச் செல்லும்போது, ரயில்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நெரிசல் மற்றும் டிக்கெட் கிடைக்காத சூழல் ஏற்படுவது வழக்கம். அதைத் தவிர்க்கும் வகையிலும், மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல வழிவகை செய்யவும், தமிழகத்தில் சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவுசெய்துள்ளது.
அதன்படி, சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று (ஏப்.13) வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
அதேபோல், ஏப்ரல் 22-ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால், ஏப்ரல் 21-ம் தேதியும் சென்னையில் இருந்து 200 சிறப்புப் பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படவுள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து இந்த சிறப்புப் பேருந்துகள், விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட முக்கிய இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையிலும், பண்டிகைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களும் வருவதால், மக்கள் பேருந்து நிலையங்களில் வாகனங்களுக்காக அலைமோதுவதைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் இந்த கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.