ஜூன்.2
இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் என்னும் கிராமத்தில் 1943ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி ஞானதேசிகன் என்னும் இளையராஜா பிறந்தார். தமது 14வது வயதில், அவரின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் தலைமையிலான பாவலர் பிரதர்ஸ் என்ற இசைக் குழுவில் சேர்ந்த இளையராஜா, கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் திரைப்பட உலகை தமது தவிர்க்க இயலாத இசையால் ஆட்சி செய்து மக்கள் மனங்களில் நிறைந்து இருக்கிறார்.
.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, இளையராஜாவுக்கு இசைஞானி என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்தார். தமிழுக்கு பெருந்தொண்டு செய்த கருணாநிதியின் பிறந்தநாளன்று அவரை மட்டுமே மக்கள் கொண்டாட வேண்டுமென்று, தமது பிறந்தநாளை ஜூன்.2ம் தேதிக்கு மாற்றிக்கொண்டவர் இசைஞானி இளையராஜா.
தமிழ் உட்பட இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இன்று வரை கோலோச்சிவரும் இளையராஜா இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவரது பிறந்தநாள் விழா இன்று இளையராஜாவின் இல்லத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 80வது பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜாவை, கோடம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவகத்திற்கு நேரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் தமிழக மூத்த அமைச்சர்கள், கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்டோரும் இளையராஜாவுக்கு நேரில் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.