நெல்லையில் ஏ.எஸ்.பியால் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்- பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு காவல்துறையால் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட நபர்கள் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரகத்தில் உதவி காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பல்வீர்சிங், குற்ற வழக்குகளில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக வெளியாக புகார் பல்வேறு தரப்பிலும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. இதைத்தொடர்ந்து, உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்தப் புகார் தொடர்பாக சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் முகம்மது சபீர் ஆலம் விசாரணை நடத்தி வருகிறார். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் உள்பட இதுவரை 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் வருகிற 10-ந் தேதி வரை எழுத்துப்பூர்வமாக தங்களது புகார் மனுவை தாக்கல் செய்யலாம் எனவும், விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. காவல்துறை விசாரணையில் பாதிக்கப்பட்ட செல்லப்பா, வேதநாராயணன், இசக்கி முத்து, சுபாஷ் உள்ளிட்ட 5 பேர் நேற்று மாலை சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து மனித உரிமைகள் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களிடம் விபரங்களை கேட்டறிந்தனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *