ஏப்ரல்.17
பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்துப்பட்டியலில் தமக்கு 1023 கோடி சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதற்கு, திருவெறும்பூரில் நடைபெற்ற முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் 70 ஆவது பிறந்தநாள் விழா நவல்பட்டு அண்ணா நகரில் நடந்தது. இதில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலம் மற்றும் நம்பர்ஒன் முதல் முதலமைச்சர் என இரண்டு வருடத்தில் இவ்வளவு பெரிய பெயர் பெற்ற முதல்வருக்குதான் நான் பிறந்த நாள் கொண்டாடி வருகிறோம் என்றார்.
கடந்த 10 வருடமாக தமிழகத்தை ஆண்டவர்கள் பாலைவனமாக விட்டுச்சென்று விட்டனர். அந்த பாலைவனத்தை பதப்படுத்தி, பண்படுத்தி நாட்டின் வளர்ச்சி என்ற விளைச்சலை தந்து, நம்பர்ஒன் முதலமைச்சர் என்ற பெயர் வாங்கி உள்ளார் என வடநாட்டு பத்திரிகைகள்கூட தமிழ் மாநிலம்தான் நம்பர் ஒன்மாநிலம், நம்பர் ஒன் முதல்வர் ஸ்டாலின்தான் என்று பாராட்டுகிறது என்று அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரு கட்சியின் மாநில தலைவர் கடந்த இரண்டு நாட்களுக்குமுன் ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளார். அதில், அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொத்து மதிப்பு 1023 கோடி என்று கூறியுள்ளார். அதை நிரூபிக்கவில்லை என்றால் 500 கோடி அபராதம் தர வேண்டும் என தலைமை கழகத்திலிருந்து அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
எனக்கு ரூ.1,023 கோடி சொத்து இருத்தால் நீயே அதை விற்று கொடு. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு தலா இரண்டரை லட்சத்திற்கு அந்த பணத்தை வைத்து புத்தகம் (நூல்கள்) வாங்கி கொடுக்கிறேன் என்று அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பதிலடி கொடுத்தார்.
மேலும், மக்களை திசை திருப்புவதற்காக வாய்க்கு வந்ததெல்லாம் அவர் கூறுகிறார். திராவிட மாடல் ஆட்சி என்று கூறி மக்கள் எல்லோரையும் கலைஞரின் மகன் ஒன்றிணைத்து வருகிறாரே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக வாயில் வந்ததை எல்லாம் சொன்னால் 100 பேரில் 10 பேராவது நம்ப மாட்டானா? என்ற நோக்கத்தில் அவர் அரசியல் செய்துவருகிறார் என்றும் அமைச்சர் அன்பில்மகேஷ் குற்றம்சாட்டினார். இந்த விழாவில் தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக்,முன்னாள் எம்எல்ஏ சேகரன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.