16வது ஐபிஎல் போட்டி – 5வது முறையாக கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்..!!

மே.30

ஆமதாபாத்தில் நடைபெற்ற 16வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் ‘பிளே-ஆப்’ சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

அதன்படி, இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்க இருந்தது. ஆனால் இரவு முழுவதும் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் இறுதிப்போட்டி ‘டாஸ்’ கூட போடப்படாத நிலையில் மறுநாளுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, குஜராத்- சென்னை அணிகள் இடையிலான இறுதிப்போட்டி நேற்றிரவு ஆமதாபாத்தில் நடைபெற்றது. முதலில் ‘டாஸ்’வென்ற சென்னை கேப்டன் டோனி, மழைக்குரிய அறிகுறி தென்பட்டதால், பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களை குவித்து, ஐ.பி.எல். வரலாற்றில் இறுதிப்போட்டியில் அதிகபட்ச ரன் குவித்த அணி என்ற பெருமையை பெற்றது.

பின்னர் 215 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியது. 0.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்த நிலையில், மழை தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை ஓய்ந்தபோதும், அவுட்பீல்டு சகதியுடன் காணப்பட்டதால் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று சென்னை அணிக்கான இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்ததால் மேலும் நெருக்கடி அதிகரித்தது. கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார்.

அதன்படி, சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 5வது முறையாக கோப்பை வென்றது. இந்த வெற்றியின் மூலம் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சின் சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமன் செய்துள்ளது.

இதனிடையே , இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு திட்டத்துடன் தோனி என்ற மனிதனின் கீழ் 5வது ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கேயின் மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள்.இது மிகச் சிறந்த கிரிக்கெட் போட்டி. இதில் நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தினார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *