மருதமலையில் பங்குனி உத்திரத் திருவிழா – இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி ரத்து

கோவையில் புகழ்பெற்ற மருதமலை சுப்பிரமணியசாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை தொடங்கியது. பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் வரும் பவுர்ணமியில் அனைத்து முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு, கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா இன்று முதல் 2 நாட்கள் நடைபெறவுள்ளது.

அதிகாலை 6 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வரும் பால்குடம், பால் காவடிகள் மூலம் முருகப் பெருமானுக்கு மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள், காலை 8 மணிக்கு பால், பன்னீர், ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சுப்பிரமணிய சாமி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்கிறார். தொடர்ந்து, 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, பாலாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறுகிறது.

இதையடுத்து சுப்பிரமணியசாமி – வள்ளி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் அர்த்த மண்டபத்தில் எழுந்தருள்கிறார். மாலை 6 மணிக்கு சாயரட்ச பூஜை, தங்க ரதத்தில் சுப்பிரமணிய சாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார்.

இன்றும் மற்றும் நாளை ஆகிய 2 நாட்களும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்குனி உத்திர திருவிழா நடைபெறும் இரண்டு நாட்களும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மலை மேல் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மலைக்கோவில் செல்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன் மூலம் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *