நெல்லையில் ஏப்.15ல் இரயில் மறியல் போராட்டம்- காங்.முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் அறிவிப்பு

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து நெல்லையில் வரும் 15ம் தேதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கொக்கிரகுளத்தில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் அதானி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதனால் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தி விடுவார் என்ற பயத்தில் மத்திய அரசு அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்தது. பிப்ரவரி 7-ந் தேதி ரூ.20 ஆயிரம் கோடி அதானி தொடர்புடைய நிறுவனத்திற்கு வந்துள்ளது. அது யாருடைய பணம்? 2014-ம் ஆண்டு உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 609-ம் இடத்தில் இருந்த அதானி, 2022-ம் ஆண்டு 3-ம் இடத்திற்கு வந்துள்ளார். இது எப்படி?இதுகுறித்து ராகுல் காந்தி உண்மையை கூறிவிடுவார் என நினைத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக படுகொலை.

இதனை கண்டித்து, நெல்லை மாவட்ட காங்கிரஸ் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். அந்த வகையில் வருகிற 15-ந் தேதி ரெயில் மறியல் போராட்டமும், 20-ந் தேதி தபால் நிலையங்களில் முற்றுகை போராட்டமும் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்க குமார், கவி பாண்டியன், மாவட்ட பொது செயலாளர் மகேந்திரன், மண்டல தலைவர்கள் ராஜேந்திரன், முகம்மது அனஸ் ராஜா, பரணி இசக்கி, கெங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *