மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது

தமிழகம் புதுச்சேரியில் இன்று முதல் 61 நாட்கள் மீன்பிடிக்கத் தடை- கரை திரும்பிய படகுகள்

ஏப்ரல்.15

தமிழகத்தில் கிழக்குக் கடற்கரையோர மாவட்டங்களில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் விசைப்படகுகள், இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, குறிப்பிட்ட தடைக்காலத்தில் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுவருகிறது.

இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இன்று முதல் (ஏப்.15) ஜூன் 14ம் தேதி வரை கிழக்குக்கடற்கரை எல்லையான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை மீனவர்கள் மீன்பிடிக்க தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மேற்குக்கடற்கரை எல்லையான கன்னியாகுமரி முதல் நீரோடி வரை ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை (61 நாட்கள்) மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

இதையொட்டி, நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், நாகூர், நம்பியார்நகர் உள்ளிட்ட 25 மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் விசைப்படகுகள் இன்று கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தடைக்காலத்தில், பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு மீன்பிடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள இந்த 61 நாள் மீன்பிடித் தடைக்காலத்தில், விசைப்படகுகள், இழுவைப்படகுகள் கடலுக்குள் செல்லக்கூடாது என மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை கமிஷனர் கே.எஸ்.பழனிசாமி அறிவித்துள்ளார். இதையடுத்து, கடலுக்குச் சென்ற அனைத்துப் படகுகளும் கரை திரும்பியுள்ளன. இந்த தடைக்காலம் முடியும்வரை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மீன்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளிலும் மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 15-ம் தேதி வரை 61 நாட்கள் அமல்படுத்தப்படுகிறது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *