தக்காளி செடிகள் அழிப்பு - விவசாயிகள் வேதனை

தக்காளி விலை சரிவால் விரக்தி – செடிகளை அழிக்கும் திண்டுக்கல் விவசாயிகள்

ஏப்ரல்.19

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுப் பகுதிகளில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத அதிருப்தியில், செடிகளை அழிக்கும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். தற்போது, இந்த பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து, விளைவித்த தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஒண்டி பொம்மன்நாயக்கனூரை சேர்ந்த விவசாயி முருகேசன் பேசுகையில், 3 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்திருந்தேன். நிலத்தை உழுவதற்கு ரூ.13 ஆயிரம், நாற்று வாங்க ரூ.20 ஆயிரம், நடவுக்கு ரூ.22 ஆயிரம், மருந்து, உரத்திற்கு ரூ.50 ஆயிரம் என செலவாகியுள்ளது. விளைந்த தக்காளிகளை பறிப்பதற்கு கிலோவுக்கு ரூ.3 கூலி கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால், தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு குறைவாக விற்பனையாகிறது. இது கட்டுபடியாகாது. ஒரு கிலோ தக்காளி குறைந்தபட்சம் ரூ.22-க்கு மேல் விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் பார்க்க முடியும். தற்போது, போதிய விலை கிடைக்காததால் பயிரிட்ட தக்காளி செடிகளை அழித்து வருகிறேன் என்றார்.

தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்காமல் இருக்கும் வகையில், மத்திய -மாநில அரசுகள் விவசாய பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுப்பதோடு, ஒட்டன்சத்திரம் பகுதியில் தக்காளி ஜூஸ் தயாரிக்கும் ஆலை அமைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முன்வர வேண்டும் என்றும் திண்டுக்கல் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *