மே.20
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மே.13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டன. அதன்படி, கர்நாடகாவில் இதுவரை இல்லாத வகையில் காங்கிரஸ் 135 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. இதையடுத்து, சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்பார்கள் என காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுடன் பதவியேற்கும் 8 அமைச்சர்களின் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் நேற்றிரவு வெளியிட்டார். அதன்படி, ஜி.பரமேஸ்வரா, கே.எச். முனியப்பா, கே.ஜே. ஜார்ஜ், எம்.பி. பாட்டீல், சதீஸ் ஜர்கிஹோலி, பிரியங் கார்கே, ராமலிங்க ரெட்டி, சமீர் அகமதுகான் ஆகிய 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். இதில் அமைச்சராகப் பதவியேற்றுள்ள பிரியங் கார்கே, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயின் மகன் ஆவார்.
பெங்களூருவில் உள்ள கண்டீவரா ஸ்டேடியத்தில் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள், நிர்வாகிகள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா 2வது முறையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமார் முதல் முறையாகவும் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.