மே.9
கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
கர்நாடகத்தில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நாளை (மே.10) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அதுமட்டுமின்றி, அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 217 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி வெளியானது.
அதைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 27-ந் தேதி முதல் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி கடந்த 29-ந் தேதி தனது பிரசாரத்தை தொடங்கி 7 நாட்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குச்சேகரித்தார்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்காக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உப்பள்ளியில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். ராகுல் காந்தியும் கர்நாடகத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரித்தார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகிஆதித்யநாத், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கர்நாடகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அதேபோல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குக் கேட்டனர்.
இதேபோல், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேவகவுடா உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர். கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.