Fri, 14 Apr 2023
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு இந்தியன் வங்கி இணங்காதது உறுதி செய்யப்பட்டது. வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறியதால் ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. ஆனால் இந்தியன் வங்கி இதற்குப் பதிலளிக்கவில்லை.
இந்திய வங்கிகள் விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கத் தவறும் பட்சத்தில், வங்கிகள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்திய ரிசர்வ் வங்கி. இந்நிலையில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கிக்கு, இந்திய ரிசர்வ் வங்கி 55 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
அதாவது இந்த வங்கி `உங்கள் வாடிக்கையாளரை அறிதல்’ என்ற கேஓய்சி (KYC) வழிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால், இந்த அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், ஜூலை 2020-ல் உயர் மதிப்பு மோசடியின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கி இது தொடர்பான அனைத்து கடித பரிமாற்றங்களையும் ஆய்வு செய்ததில் இந்தியன் வங்கி வழிமுறைகளுக்கு உட்படாமல் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கடந்த வியாழனன்று ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், `ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு இந்தியன் வங்கி இணங்காதது உறுதி செய்யப்பட்டது. வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறியதால் ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. ஆனால் இந்தியன் வங்கி இதற்குப் பதிலளிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 6, 2023-ஆம் தேதியிட்ட உத்தரவில், 2016 ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, கேஓய்சி வழிகாட்டுதலில் உள்ள சில விதிகளுக்கு இணங்காத காரணத்தினால், இந்தியன் வங்கிக்கு ரூபாய் 55 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையானது, ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது.
இந்த அபராதம் வாடிக்கையாளர்களுடன் வங்கி செய்த வர்த்தக பரிமாற்றத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை. ஆதலால் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் பயப்படத் தேவையில்லை’ என அறிவித்துள்ளது.