ஆலங்குடியில் காங்.சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் – ப.சிதம்பரம் பேச்சு

இந்தியாவில் வாய்மொழி அவதூறு வழக்கில் இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்த மோடி அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ சுப்புராம் தலைமை வகித்தார். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், அவதூறுகளில் வாய்மொழி அவதூறு, எழுத்து மூலமாக அவதூறு என்று இரண்டு வகை உள்ளது. இதில், எழுத்து மூலமான அவதூறைவிட வாய்மொழி அவதூறு சாதாரணமானது. கடந்த 123 ஆண்டுகளில் வாய்மொழி அவதூறு வழக்கிற்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக வரலாறே இல்லை. இதனை நான் மட்டும் கூறவில்லை. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரிடம் பேசுகையில், அவரும் இது வரலாற்றில் இல்லாத ஒன்று என கூறினார். ராகுல் காந்திக்கு முன்பு எந்த தலைவர்களும் அவதூறாக பேசவில்லையா? முதன்முதலாக ராகுல் காந்திதான் பேசினாரா? நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை கேள்வி கேட்டதற்காக ராகுல் காந்திக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 23ஆம் தேதி தீர்ப்பு. 24ஆம் தேதி பதவி பறிப்பு. 26 ஆம் தேதி வீட்டை காலி செய்ய உத்தரவு. எதற்காக இந்த அவசரம்? சட்டம் தடுமாறலாம். ஆனால், நீதி நிலைத்து நிற்கும். ராகுல் காந்தி இந்த வழக்கில் இருந்து மீண்டு வருவார். பல மாதங்களாக நாடாளுமன்றத்தில் எந்த ஒரு நோட்டீஸுக்கும் விவாதத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விவாதத்திற்குத்தான் நாடாளுமன்றத்திற்கு செல்கிறார்கள். ஆனால், அங்கு எந்த நோட்டீஸுக்கும் விவாதத்திற்கும் அனுமதி இல்லை என்பது வேதனைக்குரியது.

இவ்வாறு அவர் பேசினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *