கலவரக்காரர்களை கண்டவுடன் சுட மாநில ஆளுநர் உத்தரவு – மணிப்பூரில் நிலவி வரும் பரபரப்பு!

மணிப்பூரில் கலவரம் நீடித்து வரும் நிலையில் கலவரக்காரர்களை கண்டவுடன் சுட மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளது, கலவரக் காரர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலவரத்தை அடக்க மணிப்பூரில் 5 நாட்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரில் நீடித்து வரும் கலவரத்தை தடுத்து நிறுத்துமாறு பிரபல குத்துச் சண்டை வீராங்கனையான மேரிகோம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மணிப்பூர் கலவரம் குறித்து வேதனைப்பட்டுள்ளார் பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம். மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்கள் பழங்குடி அந்தஸ்து வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமூகத்தை சேர்ந்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் நேற்று பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் பின்னர் கலவரமானது. இம்பால், சவுரசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் வன்முறை உச்சக்கட்டத்தை எட்டியது. இதில் ஏராளமான வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதேபோல் வாகனங்கள், கடைகள், பொது மக்கள் கூடும் இடங்கள் என அனைத்தும் சூறையாடப்பட்டு தீக்கு இரையாக்கப்பட்டன.

கலவரம் கை மீறி போனதை தொடந்து, ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர் கொடி அணி வகுப்பு நடத்தினர். கலவரத்தை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் கலவரத்தை தொடர்ந்து #manipurisburning என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட்டாகி வருகிறது. மேலும் மணிப்பூர் கலவர போட்டோக்களும் வைரலாகி வருகிறது. இதனை குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் தனது டிவிட்டர் பக்கத்தில் மணிப்பூர் கலவர போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். மேலும் எனது மாநிலம் மணிப்பூர் பற்றி எரிகிறது, தயவுசெய்து உதவுங்கள் என பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர்கைள் அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரின் டிவிட்டர் ஹேண்டில்களையும் டேக் செய்துள்ளார்.

ராணுவத்தினர் குவிக்கப்பட்டதை தொடர்ந்து கலவரம் கட்டுக்குள் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிடம் பேசி, நிலைமை குறித்து கேட்டறிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூர் கலவரம் குறித்து பேசியுள்ள அம்மாநில முதல்வர் பிரேன் சிங், இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட தவறான புரிதலே இதற்கு காரணம் என கூறியுள்ளார். கலவரத்தை கடுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *