அதிமுக செயற்குழு முடிவுகள் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது- உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னையில் வரும் 16ம் தேதி நடைபெறும் அதிமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

ஏப்ரல் 20ம் தேதி இந்த வழக்குகளில் இறுதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு அறிவித்திருந்தது. இந்நிலையில், அதிமுகவின் செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16 ம்தேதி நடைபெற உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறியபிறகு, இடைப்பட்ட காலத்தில் அதிமுகவில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்துமே இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டதுதானே எனவும், அப்படி இருக்கையில் ஏன் இந்த அவரச முறையீடு என்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஓபிஎஸ் தரப்பு, ’ஏப்ரல் 20ல் இறுதி விசாரணை தொடங்கவுள்ள நிலையில், 16ஆம் தேதி செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்றும், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல், கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து விவாதிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.
மேலும், ஓபிஎஸ் ஆதரவு உறுப்பினர்களின் உறுப்பினர் அட்டைகளை அவர்கள் புதுப்பிக்க மாட்டார்கள் எனவும், புதிதாக சேர்க்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர்.

கட்சி எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு செயற்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும், நீக்கப்பட்டுள்ளவர்களிலும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாக தெரிவித்த ஓபிஎஸ் தரப்பு, நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால், செயற்குழு தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது.

இதைத் தொடர்ந்து அதிமுக தரப்பு, மனுதாரர்கள் கூறுவது போல எதுவும் நடக்காது என்றும், ஆறு மாதங்களில் உறுப்பினர் சேர்க்கை முடிந்து விடப்போவதில்லை என்றும் தெரிவித்தது. தேர்தல் முடிந்து பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், கட்சி தொடர்பான முடிவுகளை எடுக்க அவருக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 4 பேர் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் உள்ளதாகவும், கட்சி நடவடிக்கைகளை நீதிமன்ற வழக்குகள் மூலம் இழுத்தடிக்கின்றனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. அப்போது செயற்குழுவில் ஏதும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அதிமுக தரப்பில், கட்சி என்றால் கூட்டங்களை கூட்டுவதும், முடிவுகளை எடுப்பதும் தினந்தோறும் நடப்பதுதான் என்றும், கர்நாடக தேர்தல் தொடர்பாக செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு ள்ளதால், தற்போது, செயற்குழு தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர். மேலும், உறுப்பினர் சேர்க்கை மற்றும் நீக்கம் உள்ளிட்ட எதிலும் எடுக்கப்படும் முடிவுகள் இந்த மேல்முறையீட்டு வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் தெரிவித்தனர். தற்போது உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்த வேண்டாம் என கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி அதிமுக தரப்பு வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

மேலும், ஏற்கனவே திட்டமிட்டபடி ஏப்ரல் 20, 21ம் தேதிகளில் இறுதி விசாரணை நடைபெறும் என்றும் தேவைப்பட்டால் ஏப்ரல் 24ம் தேதியும் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *