தலைப்புச் செய்திகள் (20 -02-2024)

*சண்டிகர் மேயர் தேர்தலில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளும் செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவிப்பு .. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி ஆம் ஆத்மி வேட்பாளரர் வென்றதாக அறிவித்தது தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு.

*சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பதிவானவற்றில் 8 வாக்குகளில் மையை தடவி செல்லாது என்று தேர்தல் அதிகாரி அறிவித்ததால் சர்ச்சை … இன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் மேயர் ஆனார்.

*சண்டிகார் மேயர் தேர்தலை நடத்திய அதிகாரி அஸிஸ் மசாஜ் உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக ஆஜர் ஆகியிருந்தார் … குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரியிடம் தலைமை நீதிபதி இது வரை இல்லாத வகையில் நேரடி விசாரணை நடத்தியதால் பரபரப்பு.

*உச்ச நீதிமன்றம் தமக்கு உச்சபட்ச அதிகாரம் அளிக்கும் பிரிவு 142 – ஐ மிகவும் அவசியப்படுகிறது என்றால் மட்டும்தான் பயன்படுத்தும் … ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சண்டிகர் மேயர் தேர்தலில் இந்த அதிகாரத்தை பயன்படுத்துவதாக தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் விளக்கம்.

*நடப்பு 2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு… 2024-2025 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பட்ஜெட் உரையில் உறுதி.

*வேளாண் உற்பத்திக்கு தரமான விதைகளை பயன்படுத்தினால் 15% மகசூலை அதிகரிக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு 5, 810 விதை வகைகளை 50 முதல் 60% தள்ளுபடியில் விவசாயிகளுக்கு வழங்க ரூ.35 கோடி … 2024-2025 -ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிப்பு.

*நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் இரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம்,… நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க ரூ. 50 இலட்சம் நிதி வேளான் பட்ஜெட்டில் ஒதுக்கீடு.

*சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை, உரிகம் புளி, புவனகிரி மிதிபாகற்காய், செஞ்சோளம், திருநெல்வேலி அவுரி, ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை, செங்காந்தள் விதை ஆகிய 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்ககை … வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு.

*உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டியிருக்கிறோம்…. திமுக அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

*காவிரி டெல்டா விவசாயிகளுக்கு வேளாண் பட்ஜெட்டில் நிவாரணம் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது .. எடப்பாடி பழனிசாமி கருத்து.

*பிரதமர் மோடி நெல்லை மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவு தளத்திற்கு இந்த மாதம் 28- ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் … திருபபூர் மாவட்டம் பல்லடத்தில் 27- ஆம் தேதி நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மோடி அன்று கேரளா சென்றுவிட்டு மறுநாள் குலசேகரப்பட்டினம் வருவதாக திட்டம்.

*காவிரி – வைகை . குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு … காவரி நீரை மற்ற இடங்களுக்கு அனுப்பிவிட்டு தங்களிடம் கூடுதல் நீரை கேட்க தமிழகம் திட்டம் என்ற கர்நாடக அரசின் கோரிக்கை நிராகரிப்பு.

*சென்னையில் ஏற்கனவே காட்டுப் பள்ளியிலும் நெம்மேலியிலும் கடல் நீரை குடி நீராக்கும் இரண்டு ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில் மூன்றாவது குடி நீர் ஆலையை 24 -ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் … நெம்மேலியில் அமைந்து உள்ள இந்த குடி நீர் ஆலை மூலம் தினமும்15 கோடி லிட்டர் குடி நீர் கிடைக்க வாய்ப்பு.

*மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு தொடக்கவிழா நாளை சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறுகிறது … விழா முடிந்த பிறகு நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்த கமல் முடிவு.

*மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 5 மாநிலங்களில் விசிக போட்டியிடும்…. பானை சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த பின் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.

*கடந்த மூன்று நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் கைவிட்டனர் … இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உறுதி அளித்ததால் போராட்டம் நிறுத்தம்.

*மதுரை விளாங்குடி மின்வாரிய அலுவலகத்தில் உதவிப் பொறியாளராக உள்ள ஜான் கென்னடி, மின் இணைப்பு வழங்க ₹17,000 லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது… பிரிட்டோ சகாயராஜ் என்பவர் புதிய வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த போது கேட்ட லஞ்சப் பணத்தை ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்த போது ஜான் கென்னடி சுற்றி வளைப்பு.

*திரைப்பட நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமியை மோசடி வழக்கில் சென்னை திருமங்கலம் போலீஸ் கைது செய்தது … சினேகம் பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை பெயரில் ஜெயலட்சுமி பணம் வசூலித்தார் என்று பாடகர் சினேகன் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை

*விழுப்புரம் – திருச்சி இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை 6 ரயில்கள் ரத்து …சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் இரு மார்க்கங்களிலும் நாளை ரத்து, மேலும் பல்வேறு ரயில்கள் வேறு மார்க்கமாக செல்ல ஏற்பாடு.

*சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு தினமும் 20 லாரிகளில் தர்ப்பூசணி வரத் தொடங்கியது ,,, கிலோ ரூ 25 முதல் 30 க்கு விற்பனை.

*பத்து மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டிற்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் 2025-26ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு….மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்காகவும் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக விளக்கம்..

*ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு சோனியா காந்தி தேர்வு … குஜராத்தில் இருந்து ஜே.பி. நட்டாவும் மத்தியபிரதேசத்தில் இருந்து எல். முருகனும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு.

*டெல்லி எல்லையில் முகாமிட்டு உள்ள விவசாயிகள் நாளை தலைநகரத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக அறிவிப்பு .. ரயில்கள் மூலமும் டெல்லி செல்லக் கூடும் என்பதால் ரயில் நிலையங்களும் கண்காணிப்பு.

*உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட மராத்தா சமூகத்தினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதற்கு மராட்டிய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் … தனி இட ஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போரட்டம் நடத்தியதை அடுத்து மராட்டிய அரசு நடவடிக்கை

*இ்ங்கிலாந்து நிறுவனம் நடத்திய ஆய்வில் உலகத்தின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரான்ஸ் நாட்டுக்க முதலிடம் … இரண்டு முதல் ஐந்து இடங்களில் ஸ்பெயின், பின்லாந்து, நெதர்லாந்து, தென் கொரியா உள்ளதாக அறிவிப்பு.

*சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 84- வது இடத்தில் இருந்த இந்தியா 85 இடத்திற்கு நகர்ந்து பின்னடைவு … இலங்கை 101, வங்கதேசம் 102, நேபாளம் 103 மற்றும் பாகிஸ்தானுக்கு 105 – வது இடம்.

*எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் குரலை ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் பயன்படுத்தி பாடல் தயாரித்து தெலுங்கில் வெளியான கீடா கோலா என்ற படத்தில் வெளியிட்டதற்கு எதிர்ப்பு … தங்கள் குடும்பத்தின் அனுமதியின்றி எஸ்.பி.பி. குரலை பயன்படுத்தியதற்கு ஒரு கோடி ரூபாய் தருமாறு அவரது மகன் சரண் பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *