தலைப்புச் செய்திகள் (16-02-2024)

*மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸ் கட்சியின் ஒன்பது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் பரபரப்பு … கடந்த 2018-ல் வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்தததாக ₹210 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக பொருளாளர் அஜய் மக்கான் புகார்.

*காங்கிரஸ் கட்சியின் மேல் முறையீட்டு மனுவை அடுத்து வங்கி கணக்குகள் தற்காலிகமாக இயக்க வருமான வரி மேல்முறையீடு தீர்ப்பாயம் அனுமதி… தீர்ப்பாயம் உத்தரவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் மீண்டும் செயல்படத் தொடங்கின

*மோடி அவர்களே பயப்பட வேண்டாம்; சர்வாதிகாரத்திற்கு நாங்கள் தலைகுனிய மாட்டோம்… காங்கிரஸ் கட்சி பணத்தின் வலிமையால் இயங்கும் கட்சி அல்ல; மக்களின் வலிமையால் இயங்கும் கட்சி என்று ராகுல் காந்தி கண்டனம்.

*பத்தாம் வகுப்பு விருப்ப பாடத்திற்கான மதிப்பெண், தேர்ச்சிக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று பள்ளிக் கல்வித்துறை தகவல்… விருப்ப பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாடத் தேர்வுகள் 600 மதிப்பெண் என்ற நடைமுறை அமலுக்கு வருகிறது.

*தமிழக அரசின் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 35 நாட்களில் 2058 முகாமகள் நடத்தி 3 லட்சத்து 50 ஆயிரம் பேரின் குறைகளுக்கு தீர்வு … அரசின் சேவைகளை எளிதாக பெறுவதில் உள்ள சிரமங்களை தவிர்க்க மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டதாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்.

*அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென்ற மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து செந்தில்பாலாஜி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு …. அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு.

*ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவன் அருள், சரவணக்குமார் ஐஆர்எஸ், தவமணி, உஷா சுகுமார், பிரேம் குமார் ஆகியோர் டி.என்.பி.எஸ்.சி.யின் புதிய உறுப்பினர்களாக நியமனம் … தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் உத்தரவு.

*திமுக கூட்டணியில் இடம் பெற்று உள்ள ஒவ்வொரு கட்சியும் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை ஒதுக்குமாறு தொடா்ந்து வலியுறுத்தல் … காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகளை கொடுப்பது என்பதை முடிவு செய்த பிறகு மற்றக் கட்சிகளின் விருப்பம் பற்றி பரிசீலிக்க கட்சித் தலைமை முடிவு.

*பாஜக கூட்டணியில் அதிமுக சேரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஜி. கே.வாசன் வலியுறுத்தல் … பாஜகவுடன் கூட்டணி சேருவதை அதிமுகவின் 80 சதவிகித மாவட்டச் செயலாளர்கள் விரும்பவில்லை என்று எடப்பாடி பதில் அளித்திருப்பதாக தகவல்.

*பாஜக கூட்டணியில் 8 தொகுதிகள் கிடைத்தால் அந்த அணியில் சேருவதா அல்லது அதிமுக அணியில் சேருவதா என்று பாமக தலைமை தொடர்ந்து யோசனை … இன்னும் சில தினங்கள் காத்திருந்து நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்க திட்டம்.

*காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை தொடர்ந்து சம்பா நெல் பருவ சாகுபடியும் பாதிக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 40 ஆயிரம் வழங்க வேண்டும் … அன்புமணி வலியுறுத்தல்.

*திருச்சி -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே புதிய சுங்கச் சாவடி அமைக்கப்படுவதால் அரை கிலோ மீட்டர் தொலைவில் இரண்டு முறை கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி புகார்… மாநில அரசு தலையிடக் கோரி அதிமுக சார்பில் 23 – ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு.

*கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது மேலூரில் வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு … போதிய ஆதராங்கள் இல்லை என்று கூறி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உட்பட 17 பேர் விடுதலை.

*இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரான போக்கை கைவிட்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வர வேண்டும் … விவசாயிகளின் நியாயமான கோரிக்ககைள் நிறைவேறும் வரை அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்று சீமான் அறிக்கை.

*அரசு வேலைகளிள் முன்னுரிமை தர வேண்டும் என்பது உள்பட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத் திறனாளிகள் சென்னையில் ஐந்தாவது நாளாக போராட்டம் … கிண்டி ரயில் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசால் அகற்றம்.

*சென்னையில் கோயம்பேட்டில் பேருந்து நிலையம் செயல்பட்ட இடத்தின் ஒரு பகுதியில் 9 ஏக்கர் பரப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய பசுமைப் பூங்கா அமைக்க திட்டம்… சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமம் முடிவு செய்திருப்பதாக தகவல்.

*புதுச்சேரியில் மருத்துவம் பயிலும் 5 மாணவர்கள் நண்பரின் வீட்டுக்கு சென்று திரும்பும் போது இன்று அதிகாலை சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து … நிகழ் இடத்திலேயே இரண்டு மாணவர்கள் இறப்பு, மூன்று மாணவர்கள் காயம்.

*பேரிடர் முன் எச்சரிக்கை தகவல்களை முன் கூட்டியே பெறுவதற்கு இன்சாட் – 3 டி எஸ் என்ற செயற்கை கோளை சென்னை அடுத்த ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ஏவுவதற்கான கவுன்டவுன் ஆரம்பம் … செயற்கைக் கோளை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி. எப் – 14 நாளை மாலை ஏவ உள்ளதாக இஸ்ரோ தகவல்.

*காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் தேவையான அனுமதிகளை விரைவில் பெற்று அணை கட்டப்படும் என்று கர்நாடக மாநில பட்ஜெட்டில் உறுதி. … “கனவு திட்டமான மேகதாது அணையை கட்ட ஏற்கனவே சிறப்பு அமைப்பு உருவாக்கம், அணை கட்டும் போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு, வெட்டப்பட வேண்டிய மரங்களை அடையாளப்படுத்தும் பணி நிறைவு” என்றும் பட்ஜெட் உரையில் முதல்வர் சித்தராமய்யா விளக்கம்.

*டெல்லி புறநகரில் விவசாயிகன் நான்காவது நாளாக போரட்டம், தலைநகரத்திற்குள் நுழைவதை தடுப்பதற்கு சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி காவல்துறையும் தீவிரம்… விவசாயிகள் – மத்திய அரசு இடையே நேற்று நடை பெற்ற 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவுகள் ஏற்படாததால் மீண்டும் ஞாயிற்றுக் கிழமை பேச்சு நடத்த முடிவு.

*டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் அண்ணா சாலையில் தொமுச, சிஐடியூ உட்பட பல்வேறு தொழிற்சங்கள் சார்பில் போராட்டம் .. . மறியலில் ஈடுபட்ட 800 பேர் கைது.

*மணிப்பூரில் மீண்டும் வன்முறை, 2 பேர் பலி, 25- க்கும் மேற்பட்டோர் காயம் .குக்கி இனத்தை சேர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு. … காவலருக்கு ஆதரவாக குக்கி சமூக மக்கள் கராசந்த்பூரில் திரண்டதால் பதற்றமான சூழல்.

*ஹரியானா மாநிலத்தில் பிரதமர் மோடி ரேவரி பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல். …ரேவரியில் நடைபெற்ற பாஜக கட்சி பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ராமர் கற்பனை எனக் கூறி வந்த காங்கிரஸ் தற்போது ஜெய்ஸ்ரீராம் என்று மோடி விமர்சனம்.

*பீகார் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்திக்கு ஆர்ேஜடி தலைவர் ேதஜஸ்வி யாதவ் ஜீப் ஒட்டி பங்கேற்பு … கைமூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் இருவரும் பங்கேற்பு.

*டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை ஆறாவது முறை சம்மன் அனுப்பியதன் எதிரொலி … சட்டமன்றத்தில் தமக்கு உள்ள ஆதரவை வெளிப்படுத்த நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளார் கெஜ்ரிவால்.

*ரஷ்யாவில் ஊழலுக்கு எதிரான அறக்கட்டளை மூலமாகப் பணத்தை கையாடல் செய்ததாகக் கூறி 2013- ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி, சிறையில் மரணம்… அதிபர் புதினை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தவர் நவல்னி என்பது குறிப்பிடத்தக்கது.

*ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3- வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ..அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 131, ஜடேஜா 112, சர்ஃபராஸ் கான் 62 ரன்கள் விளாசினர். இங்கிலாந்து அணியில் மார்க் வுட் – க்கு 4 விக்கெட்கள் கைப்பற்றினார்.

*டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரம்…. இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சாக் க்ராலியின் விக்கெட்டை வீழ்த்தி சாதனை.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *