தலைப்புச் செய்திகள் (11-03-2024)

*சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைப்பு… பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு.

*குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டதால் பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர வாய்ப்பு.. திருக்கோயிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவது நிறுத்தப்படலாம் என்றும் தகவல்.

*தேர்தல் பத்திர வழக்கில் நாளை மாலைக்குள் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஸ் டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.. ஜூன் 30, 2024 வரை கால அவகாசம் கேட்டு ஸ்டேட் வங்கி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

*கடந்த 26 நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? நாட்டிலேயே பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவால் தகவல்களை எடுப்பது கடினமான செயலா? என்றும் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி… தேர்தல் பத்திர விவரங்கள் அடங்கிய உறையை பிரிக்க முடியாதா? நடைமுறை பிரச்சனைகள் என்றுக் கூறிக்கொண்டு இருக்காமல் உத்தரவை செயல்படுத்துங்கள் என்றும் கண்டிப்பு.

*சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டுத் தருவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த மோடி அரசு, சொந்த வங்கியின் விவரங்களை மறைத்து உச்ச நீதிமன்றத்தில் தலை குனிந்துள்ளது… நரேந்திர மோடியின் உண்மையான முகம் தேர்தல் பத்திரங்கள் மூலம் வெளிப்படப் போகிறது. இந்திய வரலாற்றின் மிகப்பெரிய ஊழலாக தேர்தல் பத்திரங்கள் விவகாரம் நிரூபணம் ஆகப்போவதாகவும் ராகுல் காந்தி கருத்து.

*மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணயைத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் மட்டுமே இருப்பதால் மற்று இரண்டு ஆணையர்களை தேர்வு செய்ய நடவடிக்கை … மார்ச் 15 ஆம் தேதி பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழு கூட உள்ளதாக தகவல்.

*தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு இடங்களை புதிய சட்டத்தின் கீழ் நிரப்ப தடை விதிக்கக் கோரி காங்கிரஸை சேர்ந்த ஜெயா தாகூர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு… கடந்த வாரம் அருண் கோயல் ராஜினாமா செய்ததை அடுத்து இரண்டு தேர்தல் ஆணையர்களின் பதவிகள் காலியாக உள்ளன.

*தருமபுரி மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க காரணமானவன் தாம் என்ற மகிழ்ச்சியில் இங்கு நிற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் பேச்சு…. திமுக கொண்டு வந்த ஒகேனக்கல் திட்டத்தை முடக்கியது தான் அதிமுகவின் சாதனை… வாச்சாத்தி கொடுமையை எந்த ஆட்சியில் நடந்தது என்பதையும் மறந்து இருக்க மாட்டீர்கள் என்றும் தருமபுரி விழாவில் ஸ்டாலின் கருத்து.

*எல்லா மாநிலங்களையும் ஒன்றிணைக்கும் வேலையை விட்டுவிட்டு அழிப்பதற்கு மத்திய பாஜக அரசு. முயல்வதாகவும் ஸ்டாலின் புகார் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியின் சுற்றுப்பயணத்தை வெற்றுப்பயணமாக மக்கள் பார்ப்பதாகவும் விமர்சனம்.

*தமிழ்நாட்டுக்கு முன்றுநாள் பயணமாக பிரதமர் மோடி மார்ச் 15- ஆம் தேதி வருகிறார் … சேலத்தில் 15 – ஆம் தேதியும் கன்னியாகுமரியில் 16- ஆம் தேதியும் கோவையில் 17- ஆம் தேதியும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல்.

*மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்று அளித்த மனு மீது பதில் அளிக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.. உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியிருந்தார்.

*மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவு… தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக டி.டி.வி. தினகரன் அறிவி்ப்பு.

*தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம் …. தமிழ்நாடு அரசு உத்தரவு.

*ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை” எனக் கூறியிருந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம்… சிறார் ஆபாசப் படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக இளைஞர் மீது போக்சோ மற்றும் ஐ.டி. சட்டங்களில் போலீசார் பதிவு செய்த வழக்கிற்கு எதிரான மனுவை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், இளைஞர் மீதான விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.

*நெல்லையில் போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடிய போது சுடப்பட்ட பேச்சி துரை என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. வெள்ளாங்குழி என்ற இடத்தில் கடந்த 7ஆம் தேதியன்று அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனரை வெட்டி விட்டு தப்பியோடியவர் பேச்சி துரை.

*சங்கரன் கோயிலில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டுநர் முருகன் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்தது அதிர்ச்சி அளிப்பதாக சீமான் அறிக்கை … முருகன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் அரசு வேலை வாய்ப்பும் வழங்குமாறு வலியுறுத்தல்.

*டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: 6,244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் விண்ணப்பம்…. கிராம நிர்வாக அலுவலர் 108, இளநிலை உதவியாளர் – 2,604 உட்பட 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9- ஆம் தேதி நடைபெறுகிறது..

*சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிப்பு… மமாங் தய் என்பவர் எழுதிய The Black Hill என்ற நாவலை தமிழில் மொழி பெயர்த்ததற்காக சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு.

*நாடு முழுவதும் சி.ஏ.ஏ சட்டம் எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிப்பாணை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு.. கடந்த 2019- ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தேர்தலுக்கு முன் அமல்படுத்தியது பாஜக அரசு.

*குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி அண்டை நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் … 2014 டிசம்பர் 31- க்குள் குடியேறிய இந்துகள், சீக்கியர், பௌத்தர், சமணர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

*அமலுக்கு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தின் படி இந்தியாவில் 6 ஆண்டுகள் வசித்தாலே ஆவணங்கள் இல்லை என்றாலும் குடியுரிமையை பெறலாம்… பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர், இலங்கை அகதிகளுக்கு சிஏஏ-ன் கீழ் குடியுரிமை பெற அனுமதியில்லை.

*தேர்தலில் வாக்களிப்பதை குடிமக்களின் அடிப்படை உரிமையாக அறிவிக்க வேண்டும் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது … ஏற்கனவே, இது தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், 3 நீதிபதிகள் வாக்களிப்பது அரசியல் சாசன உரிமை என்றும், 2 நீதிபதிகள் அடிப்படை உரிமை என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தனர்

*முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி.. DRDO விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து .

*சிறந்த திரைப்படம் உட்பட ஒட்டுமொத்தமாக ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்றது Oppenheimer திரைப்படம்… படத்தின் இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் விருதை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சி. ஒப்பன் ஹெய்மருக்கு கிடைத்த ஏழு விருதுகளில் சிறந்த இயக்குநர், நடிகர், துணை நடிகர், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட பிரிவுகளும் அடக்கம்.

*இதுவரை 8 முறை பரிந்துரைக்கப்பட்ட நிலையில், முதல் முறையாக ஆஸ்கர் விருதை வென்றார் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்… ஹாலிவுட் திரை உலகின் முன்னணி இயக்குநரான கி்றிஸ்டோபர் நோலனுக் கு முதன் முறையாக ஆஸ்கர் விருது கிடைத்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சி.

*சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம், சிறந்த கலை இயக்கம் உட்பட நான்கு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது Poor Things திரைப்படம். ..கடந்த ஆண்டு வெளியான Poor Things நகைச்சுவையை மையமாகக் கொண்டது.

*சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு Poor Things படத்திற்காக எம்மா ஸ்டோனுக்குக் கிடைத்தது… உலகத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை, உலகத்தின் சக்தி வாய்ந்த 100 பெண்மணிகளில் ஒருவர் என்ற சிறப்புகளை பெற்ற எம்மா ஸ்டோனுக்கு வயது 35.

*Oppenheimer படத்தில் சிறப்பாக நடித்ததற்காக Cillian Murphy-க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.,,,47 வயதாகும் Cillian Murphy இதற்கு ஆன் கோல்டன் குளோப், பாப்டா மற்றும் அகடாமி விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றவர்,

*சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது The Last Repair Shop படத்திற்கும் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை War Is Over குறும்படம் வென்றன … சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை The Last Repair Shop படம் பெற்றது.

*சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை The Boy And The Heron படம் வென்றது. … சிறந்த சர்வதேசத் திரைப்படத்திற்கான விருது The Zone Of Interest படத்திற்கு கிடைத்தது.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *