+2 கணிதத் தேர்வில் மாணவர்களுக்கு உதவி – நீலகிரியில் கல்வித்துறை அலுவலர்கள் 5 பேர் சஸ்பென்ட்

உதகை அருகே பிளஸ்-2 கணித தேர்வில் மாணவர்களுக்கு விடை எழுத உதவியதாக எழுந்த புகாரில் கல்வித்துறை அலுவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி 3-ந் தேதி வரையும், பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 14-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத நீலகிரி மாவட்டத்தில் 41 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றில் 3525 மாணவர்கள், 3915 மாணவிகள் என மொத்தம் 7440 எழுதினர். மேல்நிலைத் தேர்வுக்காக 44 முதன்மை கண்காணிப்பாளர்கள், 43 துறை அலுவலர்கள், 86 அலுவலக பணியாளர்கள், 574 அறை கண்காணிப்பாளர்கள், 14 வினாத்தாள் வழித்தட அலுவலர்கள் என 761 ஆசிரியர்கள் பொதுத்தேர்வுப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க 69 பேர் அடங்கிய பறக்கும்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 27-ந் தேதி நடந்த கணித தேர்வில் மாணவ மாணவிகள் ஒரு சிலருக்கு தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் விடை எழுத உதவி செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி சென்னை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைத்தனர். அதில், தேர்வில் விடை எழுத மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உதவியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலர் சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் கல்வித் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *