10.5% இடஒதுக்கீடு விவகாரம் – அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கெடு

தமிழகத்தில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை ஒரு மாத காலத்தில் ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் பாமக சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை நகரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 6188 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து செயல்பட தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். இது ஒரு மாவட்டத்தின் பிரச்சினை அல்ல. தமிழகத்தின் பொதுவான பிரச்சனை. தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் இரண்டாவது பெரிய மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம். அதில் முதலாவது மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் 6200 சதுர கிலோமீட்டர் கொண்டது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் 6188 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது.

8 சட்டமன்ற தொகுதிகள், 12 தாலுகாக்களை உள்ளடக்கியது திருவண்ணாமலை மாவட்டம். திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 27 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இன்றுவரை மாவட்டம் வளர்ச்சி பெறாமல் உள்ளது. நீண்ட காலமாக பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. பெரிய மாவட்டங்களை பிரித்தால் மட்டுமே மாவட்டம் வளர்ச்சி பெறும். திமுக ஆட்சிக்கு வந்தால் பெரிய மாவட்டங்களை பிரிப்போம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. 143வது நாடாக திருவண்ணாமலை மாவட்டம் இருக்கும் அளவிற்கு மக்கள் தொகை அதிகளவில் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போல் கடலூர், திருச்சி, கோவை ,தூத்துக்குடி போன்ற பல பெரிய மாவட்டங்களை இரண்டாக பிரிக்க வேண்டும். திமுகவின் அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போல் பெரிய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். ஏழை மக்கள் குறித்து அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. அமைச்சர்கள் அவர்களது சுயநலத்திற்காக பெரிய மாவட்டங்களை பிரிக்காமலும், பிரித்தால் பவர் போய்விடும் என அஞ்சி மாவட்டங்களை பிரிக்காமல் உள்ளனர். ஒரு தொழிற்சாலைகள் கூட இல்லாத மிக மிக பின்தங்கிய மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம்.

இரயில்வே திட்டம் வேண்டும் என பல முறை போராடியுள்ளோம். அடையாளத்திற்காக அரசியல் செய்வது பாட்டாளி மக்கள் கட்சி அல்ல. வெற்றிக்காக இறுதி வரை போராடுவோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலம் எடுக்க போகிறார்கள் என அறிக்கை விடுத்தவுடன் அண்ணாமலை மத்திய அமைச்சரிடம் கடிதம் கொடுத்துள்ளார். அதற்கு மத்திய நிலக்கரி அமைச்சர் ஏல பட்டியலில் இருந்து எடுத்து விடுகிறோம் என ட்வீட் செய்கிறார்.

நிலக்கரி சுரங்கம் வராது என மத்திய அமைச்சர் கூறவில்லை. அதற்கு மாறாக ஏல பட்டியலில் இருந்து விளக்கி விடுகிறோம் என்று மட்டுமே ட்வீட் செய்துள்ளார். அதற்குள் எங்களுக்கு கிடைத்த வெற்றி, எங்கள் முதல்வருக்கு கிடைத்த வெற்றி என பேசி வருகின்றனர். தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டம் மட்டுமே டெல்டா என நினைத்து கொண்டிருக்கிறார் முதல்வர்.

2 நாட்களுக்கு முன்னால் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன், அதில், தமிழகத்தில் 6 நிலக்கரி சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும். என் எல் சி 1A & 2 ஆகியவற்றிற்காக நிலம் கையகப்படுத்துதல் நிறுத்தம் மற்றும் 66 ஆண்டு காலமாக என்எல்சி நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நீர் பாதிப்பு போன்ற என்னென்ன பாதிப்பு உள்ளது என சென்னை ஐஐடி குழுவின் மூலம் மூன்று மாதத்தில் ஆய்வு அறிக்கை அரசுக்கு அளித்து, பின்னர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன்.

இவை அனைத்திற்கும் தீர்வு வராவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் ஒரு நாளில் முடியாது. அடுத்தடுத்த போராட்டம் நடைபெறும். பெரிய மாவட்டங்கள் அனைத்தையும் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிப்போம் என வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே முதல்வர் அறிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். 10.5 இட ஒதுக்கீடு குறித்து 4 முறை முதல்வரை சந்தித்துள்ளேன். அதேபோல் 6 முறை மருத்துவர் அய்யா தொலைபேசி மூலம் பேசியுள்ளார். ஆனால் ஓராண்டாகியும் எந்த அறிவிப்பும் வரவில்லை. ஒரு மாத காலத்திற்குள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பாமக சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *