சென்னை வண்ணாரப்பேட்டையில் குடிபோதையில் வந்ததால் வாகனத்தை பறிமுதல் செய்த ரோந்து போலீசாரை கண்டித்து, போதை ஆசாமி பேருந்தை வழிமறித்து நின்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வடசென்னை புது வண்ணாரப்பேட்டை இந்திரா நகரை சேர்ந்த செந்தில் என்பவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்றிரவு வேலை முடிந்து குடித்துவிட்டு வாகனத்தில் சென்றுள்ளார். புது வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே சட்டம் ஒழுங்கு போலீசார் வாகனத் தணிகையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த செந்திலின் வாகனத்தை பறிமுதல் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத செந்தில் டோல்கேட் எஸ்.என். செட்டி சாலையில் நடுரோட்டில் நின்று வாகனங்களை செல்ல விடாமல் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினார். உடனடியாக தகவல் அறிந்து புது வண்ணாரப்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் சத்தியநாதன் தகவல் தெரிந்து போக்குவரத்து போலீசாரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்து செந்திலிடம் சமரசம் பேசினார்.
இதில் சமாதமாகாமல் தொடர்ந்து பேருந்தை மறித்து நின்ற செந்தில், தனது வாகனத்தை சட்டம் ஒழுங்கு போலீசார் பிடுங்கி கொண்டனர். நீங்கள் வாங்கி கொடுக்கணும். இதற்கு நீங்கள் எனக்கு நியாயம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று அடம் பிடித்தார். இதனால் ஒன்றும் செய்ய முடியாமல் போலீசார் விழி பிதுங்கி நின்றனர். ஒரு வழியாக அவரைப் மடக்கி பிடித்து டோல்கேட் சந்திப்புக்கு கொண்டு வந்து அவரது குடும்பத்தாரிடம் போலீசார் ஒப்படைத்தனர். போதை ஆசாமியின் செயலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.