மே.19

2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது.

பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும்.

எந்த ஒரு வங்கிக் கிளையிலும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான வாய்ப்பு வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். 2,000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை. அதேநேரத்தில், அவை திரும்பப் பெறப்படுகின்றன. வங்கிகளில் வரவு வைப்பது என்பது வழக்கமாக வரவு வைப்பது போன்றதே. இதில் கட்டுப்பாடுகள் கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கருப்புப் பணப் புழக்கத்தை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தை ஏற்கெனவே ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தத் தொடங்கியது. இதனால், சந்தையில் அவற்றின் புழக்கம் பெருமளவில் குறைந்துவிட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 6.73 லட்சம் கோடியாக இருந்தது. இது 2023, மார்ச் 31ம் தேதி 3.62 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் இது 10.80 சதவீதமாகும்.

இந்தத் தொகையில் பெரும்பகுதி கருப்புப் பணமாக இருக்க வாய்ப்புள்ளதாலேயே அவை வங்கிக்கு வரவில்லை என கருதப்படுகிறது. எனவே, அவற்றை வங்கிக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *