காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக விளங்கும் ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனு மீது சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் ஏப்ரல் 20- ஆம் தேதி வழங்க உள்ள தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட், ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை விசாரித்து வந்தார். அவர் கடந்த மாதம் 23 ஆம் தேதி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.பி.மோகோர முன்பு வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞரும், அவதூறு வழக்குத் தொடர்ந்தவர் தரப்பு வழக்கறிஞரும் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். வாதங்கள் முடிவடைந்ததால் ஏப்ரல் 20 ஆம் தேதி தீர்ப்புக் கூறப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
அன்று கூறப்படும் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை அறிய இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பெரும் ஆர்வம் நிலவுகிறது. ஒரு வேளை தண்டனை உறுதி செய்யப்பட்டால் ராகுல் காந்தி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்புத் தரப்பட்டு அது வரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அல்லது தண்டனயை குறைத்தும் தீர்ப்பும் வழங்கப்படலாம். இது இரண்டுமே அல்லாமல் தண்டனையை முழுமையாக ரத்து செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளதாக வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எதுவாக இருந்தாலும் சூரத் மாவட்ட நீதிமன்றம் வழங்க உள்ள தீர்ப்பு இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.