மேட்டூர் அணை ஜூன்.12ம் தேதி திறப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

மே.30

தமிழகத்தில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை மூலம் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெற்றுவருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு, அதற்கு மாறாக மே 24ஆம் தேதி அணை திறக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு எப்போது தண்ணீர் திறக்கப்படும் என டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஜூன் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் தற்போது 103 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. அணையின் மொத்த உயரம் 120 அடியாகும். அணைக்கு விநாடிக்கு ஆயிரத்து 850 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து, ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. எப்போதும்போல், ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால், உழவுப் பணிகளுக்கான ஆயத்தங்களில் டெல்டா மாவட்ட விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *