வெளிநாட்டு முதலீடுகள் பற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.
நீலகிரியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் தலைமை தாங்கி பேசிய ஆளுநர் ரவி, வெளிநாடு சென்று பேசி அழைப்பதால் மட்டும் முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என்றும், பேரம் பேசுவதில் அவர்கள், மிக கடினமான தன்மை உடையவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே அதற்கான சூழலை நமது மாநிலத்தில் மேலும், மேலும் உருவாக்க வேண்டும் என்றும் அதுவே அவர்களை ஈர்க்ககூடியதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். எனவே உலக போட்டிக்கு தேவையான அம்சங்களை ஏற்படுத்தி வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கான சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழக அரசு அறிவிப்பு தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுளை ஈர்ப்பதற்காக ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளார். இந்தநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.