கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாநிலத்திலேயே இல்லாத வகையில் அதிக சொத்துவரியை உயர்த்தியுள்ள நகராட்சியைக் கண்டித்து பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியினர் பெண்கள் உட்பட சுமார் 200.க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் வியாபாரிகள் நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்து சொத்து வரியை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில், சொத்து வரி பொள்ளாச்சியில் மட்டும்தான் உள்ளது எனக் கூறி, அதனை உடனடியாக குறைக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்துவந்ததோடு, நகரத் தலைவர் பரமகுரு தலைமையில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுவந்தது.
இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற பொள்ளாச்சி நகர மன்ற கூட்டத்தில் சொத்து வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று, பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி கல்லூரிகள் மற்றும் காலியிடங்களுக்கு உயர்த்தப்பட்ட வரி விதிப்பில் இருந்து 50 சதவீதம் வரியை குறைத்து தமிழக அரசு கடந்த வாரம் ஏப்ரல் 4 தேதி அன்று அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால், 50 சதவீதம் குறைத்தது பொதுமக்களுக்கு போதாது என்றும், இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளிப்பதாகவும், தமிழகத்தில் உள்ள மற்ற நகராட்சிகளில் சொத்து வரிகள் உள்ளதுபோல் பொள்ளாச்சி நகராட்சியிலும் சொத்து வரியை கொண்டு வர வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால், உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால், தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த பெண்கள் உட்பட 200.க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இதனால் பொள்ளாச்சி நகராட்சி முன்பு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, பொள்ளாச்சி மாவட்ட உதவி கண்காணிப்பாளர் தலைமையில் 300.க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
பாஜகவினர் அனுமதியை மீறி கோசங்களை எழுப்பி வாறு நகராட்சி அலுவலகத்தை நோக்கி வந்தபொழுது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் இரு தரப்பிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.