குலாம் நபி ஆசாத் கடந்து போகும் ஒவ்வொரு நாளிலும் பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியாகி வருகிறார் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார். புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய 5 தலைவர்களின் பெயர்களை அதானி பெயருடன் இணைத்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் டுவிட்டரில் பதிவிட்டார். அதில், அதானியின் ஆங்கில பெயரில் ஒவ்வொரு எழுத்துடனும், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, கிரண் குமார் ரெட்டி, ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் அனில் அந்தோணி ஆகிய 5 பேரை இணைத்து குறிப்பிட்டு உள்ளார்.
இவர்களில் குலாம் நபி ஆசாத், ஜனநாயக முன்னேற்ற ஆசாத் கட்சி என்ற பெயரில் தனி கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார். மற்ற 4 தலைவர்களும் பா.ஜ.க.வில் சேர்ந்து உள்ளனர். ராகுல் காந்தியின் டுவிட்டர் பகிர்வுக்கு, அவர்கள் தரப்பில் இருந்தும் பதிலடி தரப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கேரளாவில் கொச்சி நகரில், முன்னாள் காங்கிரஸ்காரரான குலாம் நபி ஆசாத் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விரும்பத்தகாத வெளிநாட்டு வர்த்தகர்களுடன் தொடர்பு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
அவர் உள்பட, ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் அந்த வர்த்தகர்களுடன் தொடர்பு உள்ளது. இந்தியாவுக்கு வெளியே உள்பட, அவர் எங்கே போவார், விரும்பத்தகாத வர்த்தகர்கள் யாரையெல்லாம் அவர் சந்திக்கிறார் என்பது பற்றி நான் 10 எடுத்துக்காட்டுகளை தர முடியும் என்று கூறியுள்ளார்.
இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பின்னர் ராகுல் காந்திக்கு செல்வாக்கு அதிகரித்து விட்டது என பலர் கூறுகின்றனர். அவருக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்றே நான் உணர்கிறேன். சூரத் கோர்ட்டுக்கு அவர் செல்லும்போது, குஜராத்தில் இருந்து ஒரு விவசாயியோ அல்லது இளைஞரோ கூட அவருடன் செல்லவில்லை என சமீபத்திய நிகழ்வை பற்றி ஆசாத் குறிப்பிட்டார்.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சி என்று எதுவும் இல்லை என கூறிய ஆசாத், ஒரு சில நபர்களே அதில் உள்ளனர். ராகுல் உள்பட தற்போது காங்கிரஸ் தலைமையில் உள்ளவர்களுக்கு எந்த செல்வாக்கும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவுக்கான பொது செயலாளர் பொறுப்பு வகிக்கும் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், கடந்து போகும் ஒவ்வொரு நாளிலும், தனது உண்மையான குணம் வெளிப்படும் வகையில் புதிய ஆழத்திற்கு செல்லும் குலாம் நபி ஆசாத், பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியாக மாறி வருகிறார். அவர் பரிதாபத்திற்கு உரியவர் என்று மட்டுமே என்னால் கூறமுடியும் என தெரிவித்து உள்ளார்.