பால் கொள்முதல் விலை உயர்வு கோரிக்கை – நூதன போராட்டம் நடத்த உடுமலை விவசாயிகள் திட்டம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாததைக் கண்டித்து நூதன போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாள் முழுவதும் பசுவிடமிருந்து பாலைக் கறக்காமல் கன்றுக்கு மட்டும் கொடுத்து நூதன போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய விவசாயிகள், விவசாயம் சார்ந்த உபதொழிலாக கால்நடை வளர்ப்பு உள்ளது. விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காத போது கால்நடை வளர்ப்பு கைகொடுக்கும். ஆனால், சமீப காலங்களாகக் கால்நடை வளர்ப்பிலும் வருவாய் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாடுகளுக்கான உலர் தீவனம், அடர் தீவனம் உள்ளிட்டவற்றின் விலை மிகவும் உயர்ந்துள்ளது. ஆனால் பால் கொள்முதல் விலையை உயர்த்துவதில் அலட்சியம் காட்டப்படுகிறது. பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும். கறவை மாடுகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும். மானிய விலையில் கால்நடைத் தீவனங்களை வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பாலை ரோட்டில் கொட்டி போராட்டம் என பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனாலும் பயனில்லாத நிலையே உள்ளது. எனவே அரசுத்துறைகளைப் போல ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

அதன்படி, ஒருநாள் மட்டும் மாட்டுப் பாலை கன்றுகளுக்கும், சொந்தப் பயன்பாட்டுக்கும் மட்டுமே பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். அப்போதுதான் விவசாயிகளின் அருமை மற்றவர்களுக்குத் தெரியும். இந்த போராட்டம் பல நாட்கள் தொடர்ந்தால் என்ன ஆகும் என்பதை உணர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பார்கள்

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *