“பாஜக நியமிக்கும் ஆளுநர்கள் ஜனநாயகத்தை மிதிக்கிறார்கள்” – ஆளுநர் ரவி குறித்து ப.சிதம்பரம் காட்டம்

முதல்வர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்பட ஆளுநர் கடமைப்பட்டவர் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ‘சட்டப்பேரவை நிறைவேற்றும் ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அந்த மசோதா இறந்துவிட்டது என்று அர்த்தம்’ என்று கூறி இருந்தார். இதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ”சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் ஒரு விசித்திரமான, வித்தியாசமான வரையறையை அளித்துள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால், ‘மசோதா இறந்துவிட்டது என்று அர்த்தம்’ என்று அவர் கூறியுள்ளார்.

உண்மையில், சரியான காரணமின்றி ஒரு மசோதாவை ஆளுநர் நிறுத்திவைத்தால் ‘நாடாளுமன்ற ஜனநாயகம் இறந்துவிட்டது’ என்று அர்த்தம். மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அல்லது நிறுத்திவைக்க அல்லது திருப்பி அனுப்ப ஆளுநர் கடமைப்பட்டவர். திருப்பி அனுப்பப்பட்ட மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஆளுநர் வெறும் அரசியலமைப்புச் சட்ட அதிகாரி. அவர் ஒரு குறியீட்டுத் தலைவர். அவருக்கான அதிகாரங்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான விஷயங்களில் அவருக்கு அதிகாரம் இல்லை. முதல்வர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்பட ஆளுநர் கடமைப்பட்டுள்ளார். ஆனால், பாஜகவால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தங்களது அதிகாரத்தை மீறி ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *