முதியவருக்கு உதவி -பாஜகவினருக்கு பாராட்டு

பல்லடத்தில் ஆதரவற்ற முதியவருக்கு உதவி – பாஜக நிர்வாகிகளுக்கு குவியும் பாராட்டு

ஏப்ரல்.24

பல்லடம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் கிடந்த 76 வயது முதியவருக்கு முகச்சவரம் செய்து, குளிப்பாட்டி, உணவளித்து, ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்ட பாஜக நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் நடக்க முடியாத நிலையில் கடந்த 9 நாட்களாக ஆதரவற்று படுத்து கிடந்துள்ளார். இந்நிலையில், இன்று பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு துறை மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ஆகியோர் அந்த முதியவரிடம் விசாரித்ததில் அவர் சென்னையை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பது தெரியவந்தது.

மேலும், அவரை அவரது உறவினர்கள் பல்லடத்தில் விட்டு விட்டு சென்றதாகவும், ஒன்பது நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உதவ ஆளில்லாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக நிர்வாகிகள் இருவரும் அந்த முதியவருக்கு முகச் சவரம் செய்து, குளிப்பாட்டி புது துணிகளை வழங்கி அவருக்கு உணவு அளித்தனர். மேலும் ஆதரவற்ற நிலையில் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பின்றி தங்கியுள்ள முதியவர் ஜாகிர் உசேனை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஒன்பது நாட்களாக உதவ ஆளில்லாமல் தவித்து வந்த முதியவர் பாஜக நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்தார். மனிதநேயத்தோடு செயல்பட்டு முதியவருக்கு உதவிய பாஜக நிர்வாகிகளின் இச்செயல் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *