பன்னடுக்கு வாகன நிறுத்துமிட மாதக் கட்டணம் குறைப்பு – கோவை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

மே.18

கோவையில் உள்ள பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்திற்கான மாத கட்டணத்தை ரூ.3540ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.

கோவை‌ மாநகராட்சியில் திறன்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம்‌ கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‌பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த வாகன நிறுத்துமிடத்தின் துவக்க நாளிலிருந்து வாகன நிறுத்தம்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்‌ மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் படி வாகன நிறுத்தக்‌ கட்டணம்‌ (சரக்கு மற்றும்‌ சேவை வரியுடன்‌) வசூல் செய்யப்பட்டு வருகிறது.

அதன் படி, இங்கு வாகனத்தை நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு 25 ரூபாய் 42 பைசாவுடன் 18 சதவீத சரக்கு மற்றும் சேவை (GST) வரியாக 4 ரூபாய் 58 பைசா என மொத்தமாக 30 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும், கூடுதல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சரக்கு மற்றும் சேவை வரியுடன் 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் 4 மணி நேரத்திற்கு சரக்கு மற்றும் சேவை வரியுடன் 60 ரூபாயும், 6 மணி நேரத்திற்கு 80 ரூபாயும், 12 மணி நேரத்திற்கு 140 ரூபாயும், 24 மணி நேரத்திற்கு 260 ரூபாயும், ஒரு மாதத்திற்கு 4,720 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

கள ஆய்வில்‌ மேற்படி கட்டண விகிதத்தில்‌ சரக்கு மற்றும்‌ சேவை வரி 18% சேர்த்ததால்‌ மாதாந்திர கட்டணம்‌ (4000 + 720) ரூ.4720/- ஆக இருப்பது கூடுதலாக உள்ளது என பயனாளிகள்‌ தெரிவித்ததாலும்‌ மற்றும்‌ பயனீட்டாளர்கள்‌ யாரும்‌ வாகன நிறுத்தம்‌ செய்ய முன்வரவில்லை. மாத வாடகை ரூ.2400/- இருந்த பொழுது 61 வாகனம்‌ மாத வாடகைக்கு நிறுத்தப்பட்டிருந்தது. வாடகை ரூ.4720/-ஆக உயர்த்திய பொழுது கட்டணம்‌ கூடுதலாக உள்ளதென கூறி, 30 பயனீட்டாளாகள்‌ தங்கள்‌ வாகனத்தை தொடர்ந்து நிறுத்தவில்லை.

எனவே, மாநகராட்சிக்கு வருவாய்‌ இழப்பீடு ஏற்படாமல்‌ இருப்பதை தவிர்க்கவும்‌ மற்றும்‌ பொதுமக்களுக்கு சேவை நோக்கத்தோடும்‌ செயல்பட வேண்டியுள்ளதால்‌, மேற்படி கட்டண விகிதத்தில்‌ மாதாந்திர கட்டணம்‌ மற்றும்‌ ரூ.4720/-ல்‌ இருந்து ரூ.3540 (ரூ.3000 + 540 (GST 18%) ஆக குறைத்து நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது. மேலும் இதர நாள்‌, மணி நேரக்‌ கட்டணத்தில்‌ எவ்வித மாற்றமும்‌ செய்யாமல் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.இந்த கட்டண அட்டவணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *