மே.8
நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு தோல்வி பயத்தால் புதுச்சேரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் என்னும் உயிர்க்கொல்லி தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் நீட் தேர்வுக்கு அஞ்சி நடந்த மூன்றாவது தற்கொலை ஹேமச்சந்திரனின் மறைவு ஆகும். இதற்குமுன் கடந்த மார்ச் 27ம் நாள் சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மாபாளையத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வந்த சந்துரு என்ற மாணவர், பயிற்சி மையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் 5-ஆம் நாள் நெய்வேலியில் நிஷா என்ற மாணவி நீட் அச்சத்தால் தொடர்வண்டிமுன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தமிழ்நாடும், புதுச்சேரியும் வெவ்வேறு நிர்வாகப் பகுதிகளாக இருக்கலாம். ஆனால், பாதிப்புகள் ஒன்றுதான். தமிழ்நாட்டைப் போலவே புதுவையின் மனநிலையும் நுழைவுத்தேர்வுகளுக்கு எதிரானதுதான். தமிழ்நாட்டிற்கு முன்பாகவே கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே புதுச்சேரி மாநில அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அதன்மீது கடந்த 6 ஆண்டுகளாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீட் ஓர் உயிர்க்கொல்லித் தேர்வு. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நீட் தேர்வுக்கு அஞ்சி தமிழ்நாட்டில் 60-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழகம் மற்றும் புதுவையில் நீட் தேர்வால் இனி எவரும் உயிரிழக்கக் கூடாது. அதை உறுதி செய்யும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் 454 நாட்களுக்கு முன் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசு தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும். புதுச்சேரிக்கும் நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மருத்துவப் படிப்பைவிட மனித உயிர் மேலானது என்பதால், நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.