நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா திட்டம் – மீண்டும் செயல்படுத்தப்படும் என சபாநாயகர் உறுதி

ஏப்ரல்.26

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கிடப்பில் போடப்பட்டுள்ள தொழில்நுட்பப் பூங்கா விரிவாக்கத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உறுதியளித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த 2000-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின் போது 2,100 ஏக்கர் பரப்பளவில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட தொழில் நுட்ப பூங்கா திட்டம் அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், கிடப்பில் போடப்பட்டது. பின்னர் கடந்த 2006-ம் ஆண்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மீண்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனை விரிவுபடுத்தும் பொறுப்பு ஆந்திராவை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அந்த நிறுவனம் தொழில் நுட்ப பூங்கா திட்டத்தை செயல்படுத்தாமல் இந்த நிலத்தை அடமானம் வைத்து அதன் மூலம் கடன் வாங்கி மோசடி செய்து விட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.

தற்போது 9 தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. மேலும், தொழிற்சாலைகள் அமைப்பதற்கு ஏதுவாக சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் தொழிற் சாலைகள் தொடங்கப்படாமல் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு நாங்குநேரி தொழில் நுட்ப பூங்காவை பார்வையிட்டார். அங்கு செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து தொழிற்சாலைகளின் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, நாங்குநேரி தொழில் நுட்ப பூங்கா திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இதுபற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதல்-அமைச்சர் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் ஆர்வமாக உள்ளார். எனவே, நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கி உள்ளவர்கள் தைரியமாக தொழில் செய்யுங்கள். உங்களுக்கு முதல்-அமைச்சர் பாதுகாப்பாக இருப்பார். கலைஞரின் கனவு திட்டமான இந்த திட்டத்திற்கு உயிரூட்டப்படும்.

வருகிற ஜூலை மாதம் இந்த பொருளாதார மண்டல வளாகத்தில் கையுறை தயாரிக்கும் நிறுவனம் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாங்குநேரி மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரம் பேருக்கு வேலை அளிப்பதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜோசப் பெல்சி, ராஜன், ஆரோக்கிய எட்வின் மற்றும் தொழில் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *