தேசிய கட்சிக்கான தகுதியை இழந்தது மம்தா, சரத்பவார் கட்சிகள் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தேசிய கட்சிக்கான தகுதியை இழந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கெஜிரிவால் தலைமையில் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக் கட்சி முதலில் டெல்லியில் ஆட்சியை பிடித்தது. பின்னர் படிப்படியாக பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கால்பதிக்க தொடங்கியது.

பஞ்சாப்பில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. மேலும், கோவா, குஜராத் தேர்தல்களிலும் கணிசமான வாக்குகளையும், இடங்களையும் ஆம் ஆத்மி பெற்றது. இதைத்தொடர்ந்து, ஆம் ஆத்மியை தேசிய கட்சியாக அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு அக்கட்சி சார்பில் கடிதம் எழுதியது. இதைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கியுள்ளது.

டெல்லி, கோவா, பஞ்சாப் மற்றும் குஜராத் தேர்தல்களில் ஆம் ஆத்மியின் செயல்பாடுகளின் அடிப்படையில் அந்த கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை தேசிய கட்சிக்கான அந்தஸ்தை இழந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பா.ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், தேசிய மக்களின் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய 6 கட்சிகள் மட்டுமே தற்போது தேசிய கட்சிகளாக உள்ளன.

ஒரு கட்சியானது தேசிய அங்கீகாரத்தைப் பெற , குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் 6 சதவீத வாக்குகள் மற்றும் குறைந்தபட்சம் 4 மக்களவை உறுப்பினர்களை பெற்றிருக்க வேண்டும்.

இதனிடையே, ராஷ்டிரீய லோக்தளம் (உத்தரபிரதேசம்), பாரதிய ராஷ்டிர சமிதி (ஆந்திரா), பி.டி.ஏ. (மணிப்பூர்), பா.ம.க. (புதுச்சேரி), புரட்சிகர சோசலிச கட்சி (மேற்கு வங்காளம்), எம்.பி.சி. (மிசோரம்) ஆகிய கட்சிகள் மாநில கட்சிக்கான தகுதியை இழந்துள்ளன. அதேநேரத்தில், நாகாலாந்தில் திரிணாமுல் காங்கிரசும், மேகாலயாவில் தேசியவாத காங்கிரசும் மாநில கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதேபோல, லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சி, நாகாலாந்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *