தென்காசியிலிருந்து கேரளாவுக்கு கனிமவளக் கடத்தல் – சிறப்பு தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு

தென்காசியிலிருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக கனிமளவங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், புளியரை சோதனை சாவடியில் சிறப்பு தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கேரளாவிற்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்படுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இருப்பினும், விதிகளை மீறி சட்டவிரோதமாக, ஏராளமான லாரிகளில் தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வரும் சூழலில், கடந்த இரண்டு தினங்களாக தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் உள்ள புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அங்கு, கேரளாவிற்கு கனிம வளங்களை எடுத்துச் செல்லும் லாரிகளை மறித்து அவர்கள் ஆவணங்களை சரி பார்த்து அனுப்பினர்.
சட்ட விரோதமாக அதிக பாரங்களை ஏற்றி சென்ற லாரிகளைப் பிடித்து அபராதம் வி்தித்தனர்.

இந்த நிலையில், தென்காசி, கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்துவதற்காக சிறப்பு தனிப்படை நியமிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தென்காசி மாவட்டத்திற்கு திருச்சியில் பணியாற்றி வந்த கனிம வளத்துறை உதவி இயக்குனர் சத்தியசீலன் தலைமையில் மூன்று பேர் அடங்கிய குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

அந்த சிறப்புக் குழுவானது, இன்று தமிழக-கேரளா எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரிகள் அனைத்தையும் முறையான சோதனைக்கு உட்படுத்தி, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுப்பிவைத்தனர். இது தொடர்பாகப் பேசிய சிறப்புத் தனிப்படை அதிகாரி சத்தியசீலன், இந்த நடவடிக்கை தொடரும் எனவும், சட்ட விரோதமாக கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *