தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் :ரூ.44,098 கோடி – 500 மதுபானக் கடைகள் விரைவில் மூடப்படும் என அறிவிப்பு

தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுபானக்  சில்லறை விற்பனைக் கடைகள்  மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டாஸ்மாக் எனப்படும் அரசு மதுபானக் கடைகள் மூலம் 8047.91 கோடி ரூபாய் கூடுதல் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022- 2023 ஆம் ஆண்டில் ஆயத்தீர்வை வருவாய் மூலமாக ரூ. 10,401.56 கோடியும், மதிப்புக்கூட்டு விற்பனை வரி மூலமாக ரூ. 33697 கோடியும் என மொத்தமாக ரூ. 44,098.56 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2021 -2022 ஆம் ஆண்டு வருவாயைவிட 8,047.91 கோடி அதிகம் எனவும் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிவக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003 – 2004 ஆம் ஆண்டிலிருந்து 2022 – 2023 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் மூலமான வருவாய் படிபடிப்படியாக அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2018-19 – ம் ஆண்டில் மது விற்பனை வருவாய் ரூ. 5 ஆயிரம் கோடிக்கும்மேல் அதிகரித்த நிலையில், 2022-23 நிதியாண்டில் 8000 ஆயிரம் கோடிக்குமேல் வருவாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டுவருவதாகவும், அதில் தகுதியான 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும், டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு 1 ஆயிரத்து 100 ரூபாய், விற்பனையாளர்களுக்கு 930 ரூபாய், உதவியாளர்களுக்கு 840 ரூபாய் என இந்த மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *