ஏப்ரல் 17
இன்று தங்களின் வீழ்ச்சியை ஆம் ஆத்மி கொண்டு வரும் என்பது பா.ஜ.க.வுக்கு தெரியும் என்று ராகவ் சதா தெரிவித்தார்.
டெல்லி கலால் கொள்கை (மதுபான கொள்கை) முறைகேடு வழக்கில் ஏப்ரல் 16ம் தேதி பகல் 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை ஸ்ரீ கிருஷ்ணர் என்றும் பா.ஜ.க.வை கம்சன் என்று ஆம் ஆத்மியின் ராகவ் சதா குறிப்பிட்டார்.
ராகவ் சதா செய்தியாளர்களிடம் கூறுகையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னை கொன்று விடுவார் என்பதை கம்சன் அறிந்திருந்தார். எனவே ஸ்ரீ கிருஷ்ணருக்கு தீங்கு விளைவிக்க எல்லா முயற்சிகளையும் செய்தார். பல சதித் திட்டங்களையும் கம்சன் தீட்டினார். ஆனால் கம்சனால் ஸ்ரீ கிருஷ்ணரின் தலையில் ஒரு முடியை கூட சேதப்படுத்த முடியவில்லை. அதே போல் இன்று தங்களின் வீழ்ச்சியை ஆம் ஆத்மி கொண்டு வரும் என்பது பா.ஜ.க.வுக்கு தெரியும் என்று தெரிவித்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி எம்.பி.க்கள் ஆகியோர் நேற்று காலை சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சென்றனர். சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வெளியே அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லா கேள்விகளுக்கும் நான் பதிலளிப்பேன். பா.ஜ.க. தலைவர்கள் எனது கைது பற்றி பேசுகிறார்கள். சி.பி.ஐ. பா.ஜ.க.வால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.