ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் : வழக்கறிஞர் நியமித்து கர்நாடக அரசு உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா சுதாகரன் இளவரசி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சொத்துக்களை கர்நாடக அரசு ஏலம் விட நீதித்துறை சார்பில் அரசு வழக்கறிஞர் கிரண் எஸ். ஜாவலியை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, அவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்துகளை குவித்தது தெரியவந்தது. இதுகுறித்த வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டு, தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது.

கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி இந்த வழக்கில் 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோா்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா உள்பட 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். அவர்களின் மனு ஏற்கப்பட்டு, சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு, கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்துவிட்டு, பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. இந்த தீர்ப்புக்கு முன்பே ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவரது பெயர் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

மீதமிருந்த, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு முதன்மை சிட்டி சிவில் செசன்சு கோர்ட்டில், பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி ஒரு கடிதம் வழங்கினார்.

இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா சுதாகரன் இளவரசி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சொத்துக்களை கர்நாடக அரசு ஏலம் விட நீதித்துறை சார்பில் அரசு வழக்கறிஞரை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு வழக்கறிஞர் கிரண் எஸ் ஜாவலியை நியமித்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் வழக்கறிஞர் கிரண் எஸ்.ஜாவலி மேற்கொள்வார் எனவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *