சிறு சேமிப்பு திட்டங்களுக்கும் பான்-ஆதார் கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு…!

இந்தியாவில் இனி சிறு சேமிப்பு திட்ட கணக்குகளுக்கும் ஆதார் மற்றும் பான் எண்களை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் என்பது ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில், இந்த ஆதார் எண்ணைப் பிற அடையாள அட்டைகளுடன் இணைப்பதற்கு மத்திய அரசு வழிவகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிறு சேமிப்பு திட்டக் கணக்குகளுக்கு ஆதார் எண் மற்றும் பான் அட்டை கண்டிப்பான இணைக்கப்பட வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பான் -ஆதார் இணைப்புக்கு ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பான் மற்றும் ஆதார் இணைப்பு என்பது சேமிப்பு திட்டங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை சேமிப்பு திட்டங்கள் தொடங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை. தற்போது வெளியாகியுள்ள இந்த அறிவிப்பின் படி, சேமிப்பு திட்டங்கள் வைத்துள்ளவர்கள் 6 மாத அவகாசத்திற்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

பி.பி.ஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY),தேசிய சேமிப்புச் சான்றிதழ் போன்ற சேமிப்பு திட்டங்களில் கணக்கு வைத்துள்ள நபர்கள், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், புதியதாகச் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வோர், 6 மாதகாலத்திற்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆதார் எண் இல்லாதவர்கள், ஆதார் கார்டு பெற பதிவு செய்த எண்ணைக் கூட சமர்ப்பிக்கலாம் என்றும், கணக்கில் 50,000 ரூபாய்க்குப் பரிவர்த்தனை இருந்தால் ஆதார் எண் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் அனைத்து பரிவர்த்தனைக்கும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ஆதார் மற்றும் பான் எண்களைச் சேமிப்பு திட்டங்களுடன் இணைக்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆதார்-பான் இணைப்பை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைக்கத் தவறினால், சம்பந்தப்பட்டவர்களின் கணக்குகள் முடக்கப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *