மே.31
சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் 9 நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு தமிழகம் திரும்புகிறார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு முதலீட்டாளா்களை அழைப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும் கடந்த 23-ந்தேதி 9 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.
முதலில் சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத் தொடர்ந்து, ஜப்பானுக்கு அவர் சென்றார். அங்கு நேற்று முன்தினம் ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ, செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ மற்றும் வர்த்தக அமைப்புடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். ஜப்பானில், 6 நிறுவனங்களுடன் மொத்தம் ரூ.818 கோடியே 90 லட்சம் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.
இதைத் தொடர்ந்து, 9 நாட்கள் வெளிநாடு பயணத்தை நிறைவு செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே.31) இரவு 10 மணியளவில் தமிழகம் திரும்புகிறார். சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு திமுகஅமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.