சாதிச்சான்றிதழை சரிபார்க்கும் அதிகாரம் – டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மே.5

சாதிச்சான்றிதழை சரிபார்க்கும் அதிகாரம் டி.என்.பி.எஸ்.சிக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 1996-97 ஆம் ஆண்டுகளில் நடத்திய குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஜெயராணி என்ற பெண், இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்டார். அவரின் கணவர் இறந்த நிலையில், கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறி எஸ்.சி சாதிச்சான்றிதழ் பெற்றிருந்தார்.

தேர்வில் தேர்ச்சிபெற்ற நிலையில் பணி நியமனத்துக்கு கணவர் பெயரில் எடுத்த சாதிச்சான்றிதழை அவர் சமர்ப்பித்திருந்தார். அதனை ஏற்றுக்கொள்ளாத டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், தந்தை பெயரில் பெற்ற சாதிச்சான்றைச் சமர்ப்பிக்கும்படி ஜெயராணிக்கு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ஜெயராணி வழக்கு தொடர்ந்தார். அந்த வழககு சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதியால் விசாரிக்கப்பட்டது. அதில், அவர் சமர்ப்பித்த சாதிச்சான்றிதழ் செல்லும் என்றும், தந்தை பெயரில் பெற்ற சாதிச்சான்றிதழை சமர்ப்பிக்கும் படி உத்தரவிட டிஎன்பிஎஸ்சி அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்தத் தீர்ப்பினை எதிர்த்து, டிஎன்பிஎஸ்சி மேல்முறையீடு வழக்கைத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் திலகவதி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.சி சாதிச்சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களுக்கே அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய டிஎன்பிஎஸ்சி-க்கு அதிகாரம் இல்லை என்றும், இந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது என்றும் கூறி, டிஎன்பிஎஸ்சி மேல்முறையீடு செய்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *