கோவை விமானநிலையத்தில் அதிக கட்டணம் எதிரொலி – சரக்கு போக்குவரத்து பாதிப்பு

கோவை விமான நிலையத்தில் விமானம் மூலம் சரக்குகளை அனுப்புவதற்கான கட்டணம் மற்ற விமான நிலையங்களைவிட அதிகமாக இருப்பதால் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு நாள்தோறும் விமான சேவை வழங்கப்பட்டுவருகிறது. தினமும் இரவு 7.45 மணியளவில் கோவையில் தரையிறங்கும் விமானம், மீண்டும் 8.45 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்கிறது. தினமும் பயணிகள் இருக்கைகள் முழுவதும் நிரம்பி இயக்கப்படும் இந்த விமானத்தில், சரக்குகள் மட்டும் மிக குறைந்த அளவே கையாளப்படுகின்றன. இதற்குக் காரணம், திருச்சி, கொச்சின் விமான நிலையங்களைக் காட்டிலும் கோவையில் அதிக கட்டணம் வசூலிப்பதுதான் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாவது,கோவையிலிருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட இரு வெளிநாடுகளுக்கு மட்டும் நேரடி விமான சேவை உள்ளது. ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு முறையும் 3 டன் எடையிலான சரக்குகள் அனுப்பிவைக்கப்படுகின்றன. ஆனால், வாரம் முழுவதும் இயக்கப்படும் சிங்கப்பூர் விமானத்தில் மட்டும் வாரம்தோறும் அதிகபட்சமாக 3 டன் அளவில் மட்டுமே சரக்குகள் அனுப்பப்படுகிறது. கோவையிலிருந்து ஒரு கிலோ சரக்கு கையாள ரூ.130 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருச்சியில் ரூ.100 மற்றும் கொச்சினில் ரூ.70 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் திருச்சி மற்றும் கொச்சின் விமான நிலையங்களில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகளவு சரக்குகள் கையாளப்படுகின்றன.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் சரக்கு கையாளும் அளவை அதிகரிக்கும் நோக்கில் விரைவில் பிரத்யேக அலுவலகத்தை திறக்க தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்பின், கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு பொறியியல் துறை சார்ந்த மற்றும் உணவு பொருட்கள் உள்ளடக்கிய பல்வேறு சரக்குகள் கையாளவதற்கான கட்டணத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *