மே.21
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்காக ஜமேசா முபின் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் வெடிமருந்துகளை வாங்கியதாக என்.ஐ.ஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி, கோவை கோட்டைமேடு கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே ஜமேசா முபின் என்பவர் ஓட்டிச் சென்ற கார் வெடித்தது. இதில் ஜமேசா முபின் உயிரிழந்தார். இவ்வழக்கில், முபின் உறவினர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தமிழக காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தேசிய புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் விசாரணையில் முபின் மற்றும் அவரது தாய் வழி உறவினர்களான முகமது அசாருதீன் மற்றும் அப்சர் கான் ஆகியோர் வெடிகுண்டு தயாரிப்பதற்காக அறியப்படாத அளவு கரி, அலுமினிய பவுடர், தீப்பெட்டிகள், பென்சால்டிஹைட் டைமெத்தில் அசெட்டல் ஆகிய ரசாயனங்கள், நான்கு சிலிண்டர்கள் மற்றும் மூன்று டிரம்கள் ஆகியவற்றையும் வாங்கியதாக ஏப்ரல் 20 அன்று தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிப்ரவரி மாதம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவிலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டதை அடுத்து, முபினும் அவரது உறவினர்களும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இதற்கான மூலப்பொருட்களை வாங்கத் தொடங்கியதாகவும் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இ-காமர்ஸ் தளங்களான அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆன்லைன் உர சப்ளையர் மற்றும் உள்ளூர் டீலர்கள் மூலம் 2 கிலோ முதல் 30 கிலோ வரை சிறிய அளவில் கொள்முதல் செய்து வந்துள்ளனர். ஜமேசா முபின், அசாருதீன் மற்றும் அஃப்சர் கான் ஆகியோர் மொத்தம் 134 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், 56 கிலோ சல்பர், மூன்று டிரம்கள் மற்றும் நான்கு சிலிண்டர்கள் (இதில் இரண்டு அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டது) ஆகியவற்றை வாங்கியுள்ளனர். தவிர, அறியப்படாத அளவு கரி, அலுமினியம் தூள், தீப்பெட்டிகள் மற்றும் பென்சால்டிஹைட் டைமெத்தில் அசெட்டல் ஆகியவை உள்நாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஐஎஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள், சதி மற்றும் நிதியுதவி போன்ற 40 வழக்குகளில் இதுவரை 175 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது. ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 32 வழக்குகளில் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.