கோவை அருகே யோகாவில் கின்னஸ் சாதனை படைத்த குட்டீஸ் -குவியும் பாராட்டு

கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்த பதினோரு வயது சிறுவன் மற்றும் ஆறு வயது சிறுமி ஆகியோர் இணைந்து யோகாவின் திம்பாசன கலை மற்றும் கால்களால் முட்டை எடுத்து வைப்பது என இருவேறு சாதனை செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த பாலமுரளி கிருஷ்ணன் – ரம்யா ஆகியோரது மகள் ரித்விகா. ஆறு வயதான சிறுமி ரித்விகா, யோகா கலையில் பயிற்சி பெற துவங்கி ஒராண்டில் கின்னஸ் உட்பட பல்வேறு சாதனைகளை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தனது ஆறு வயதிலேயே இளம் சாதனையாளர் விருது பெற்ற இவர், புதிய சாதனையாக, தனது இரு கால்களை மட்டுமே பயன்படுத்தி ஆறு முட்டைகளை சிறிய கோப்பையில் எடுத்து வைத்து சாதனை புரிந்துள்ளார். மேலும், இவர் 12 விநாடிகளில் செய்த இந்த நூதன சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

இதேபோல, அதே பகுதியை சேர்ந்த செந்தில் குமார், கவுசல்யா ஆகியோரின் மகன் சித்தேஷ். ஆறாம் வகுப்பு பயின்று வரும் இவர், யோகா கலையில் முக்கிய ஆசனமான திம்பாசனத்தில் நின்றபடி, 30 விநாடிகளில் 30 முறை மார்பை தரையில் தொட்டு, எழுந்து அசத்தினார்.

யோகாவில் மிக அரிதான இந்த ஆசனத்தை செய்த சிறுவன் சித்தேஷ், கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளார். ஒரே பள்ளியில் பயிலும் இரு மாணவர்கள், செய்த இருவேறு சாதனைகளை பார்த்து, அங்கு கூடியிருந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் என அனைத்துத் தரப்பினரும் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். இந்த இரு குழந்தைகளும் யோகாவில் நிகழ்த்தியுள்ள சாதனைகள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததற்கு ஏராளமானோர் பாராட்டுக்களை குவித்துவருகின்றனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *