கோவை ரயில்களின் பயண நேரம் மாற்றம்

கோவையில் 7 ரயில்களின் பயண நேரத்தில் மாற்றம் -சேலம் ரயில் கோட்டம் அறிவிப்பு

மே.11

கோவையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் 7 ரயில்களின் பயண நேரம் இன்று மாற்றப்பட்டுள்ளது. கோவை-பாலக்காடு ரயில் நிலையங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகளுக்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுக்கரை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று 7 ரயில்களின் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை-பாலக்காடு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மதுக்கரை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளன. எனவே சொர்ணூரில் இருந்து இன்று காலை (மே.11) காலை 8.20 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் ரயில் (எண் 06458), மங்களூரு சென்ட்ரலில் இருந்து காலை 9 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் ரயில் (எண் 16324) ஆகியவை பாலக்காடு-கோவை இடையே ரத்து செய்யப்படுகின்றன.

கோவையில் இருந்து இன்று மாலை 4.30 மணிக்கு சொர்ணூர் புறப்பட்டுச் செல்லும் ரயில் (எண்.06459) கோவை-பாலக்காடு இடையே ரத்து செய்யப்படுகிறது. இது தவிர, திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு பாலக்காடு புறப்பட்டு வரும் ரயில் (எண் 16843), போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

சொர்ணூரில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் ரயில் (எண் 06804), மங்களூரு சென்ட்ரலில் இருந்து காலை 11.05 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் ரயில் (எண் 22609) ஆகியவை பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும். கோவையில் இருந்து மாலை 6 மணிக்கு பாலக்காடு புறப்பட்டுச் செல்லும் ரயில் (எண் 06807) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *