கூர்நோக்கு இல்லங்கள் சீர்திருத்தப் பள்ளியாக செயல்படுவதை உறுதிப்படுத்துக..! – தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

மே.2

தமிழகத்தில் செயல்படும் சிறார் கூர்நோக்கு இல்லங்கள் சீர்திருத்தப் பள்ளியாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபடும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை, தங்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டதே, சிறார் கூர்நோக்கு இல்லங்கள். மாவட்ட அளவில் உள்ள இந்த கூர்நோக்கு இல்லங்கள், மாநில அரசின் சமூகப் பாதுகாப்பு துறையின்கீழ் செயல்படுகின்றன.

18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் அவர்கள் வளரும் சூழ்நிலையால்தான் குற்றங்கள் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, அவர்களை தனியாக தங்க வைத்து, மனதை நல்வழியில் செலுத்த பயிற்சி தருவதே சிறார் கூர்நோக்கு இல்லங்களின் நோக்கம்.

ஆனால், தமிழகத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லங்களிலிருந்து, சிறார்கள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருநெல்வேலி சிறார் கூர்நோக்கு இல்லத்திலிருந்து 12 சிறுவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். சீர்திருத்தப் பள்ளியாக செயல்பட வேண்டிய கூர்நோக்கு இல்லங்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இல்லை சுகாதாரமற்ற சூழ்நிலை இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இப்படி குழந்தைகள் வாழ முடியாத அளவுக்கு மோசமான சூழல் இருப்பதால்தான் சிறார்கள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் நடப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. முதலமைச்சரும், அமைச்சர்களும் சிறார் கூர்நோக்கு இல்லங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். சுகாதாரமான, சத்தான உணவு, போதிய இட வசதி தேவையான உடைகள், சுத்தமான கழிவறைகள், குளியல் வசதி, யோகா, உடற்பயிற்சி செய்வதற்கான ஏற்பாடுகள் என அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

கூர்நோக்கு இல்லங்களில் பொறுப்பாளராக இருக்கும் அதிகாரிகள், கண்டிப்பானவராக மட்டுமல்லாமல், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படும் கனிவானவராகவும் இருக்க வேண்டும், அப்படிப்பட்டவர்களை மட்டுமே கூர்நோக்கு இல்லங்களில் நியமிக்க வேண்டும்.

ஏனெனில், குழந்தைகள்தான் நம் நாட்டின் எதிர்காலம். அவர்கள் தான் நாட்டின் செல்வங்கள். இதனை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்களையும் மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி தமிழகத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லங்கள் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *